சாலையில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் பலி
தேவர்சோலை அருகே சாலையில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் பலியானார். அவரது தம்பி படுகாயம் அடைந்தார்.
கூடலூர்
தேவர்சோலை அருகே சாலையில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் பலியானார். அவரது தம்பி படுகாயம் அடைந்தார்.
அண்ணன்-தம்பி
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி தொண்டர் நாடு பகுதியை சேர்ந்தவர் பேபி. இவரது மகன்கள் ஜிபின் (வயது 25), ஜூபின் (23). ஜிபினுக்கும், கூடலூர் தாலுகா தேவர்சோலை அருகே உள்ள கம்பாடி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது 5 மாத கைக்குழந்தை உள்ளது.
இந்த நிலையில் தனது மனைவி, குழந்தையை காண தொண்டர் நாட்டில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் ஜிபின் தனது தம்பி ஜூபினுடன் நேற்று முன்தினம் கம்பாடிக்கு வந்தார். பின்னர் இரவு 9 மணிக்கு பொருட்கள் வாங்குவதற்காக 2 பேரும், மோட்டார் சைக்கிளில் தேவர்சோலைக்கு புறப்பட்டு சென்றனர். மோட்டார் சைக்கிளை ஜிபின் ஓட்டினார்.
சாலையில் கவிழ்ந்தது
பாடந்தொரை புழுக்கொல்லி பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேகத்தடை அமைப்பதற்காக சாலையின் ஒருபுறம் மேடாக ஜல்லி கற்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது.
அந்த வழியாக அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தபோது, அந்த மேடு மீது மோதாமல் இருக்க ஜிபின் மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முயன்றார். ஆனால் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழந்தது. இதனால் 2 ேபரும் பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டனர். இதில் ஜிபின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தம்பி ஜூபின் படுகாயம் அடைந்தார்.
வேகத்தடை அமைக்கக்கூடாது
இதை கண்ட அக்கம்பக்கத்தினர் மற்றும் தகவல் அறிந்த தேவர்சோலை போலீசார் இணைந்து படுகாயம் அடைந்த ஜூபினை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பலியான ஜிபின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த இடத்தில் கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலைராஜன் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை அமைப்பதை கைவிட வேண்டும் என்று பரிந்துரை செய்தனர். இதை ஏற்று அப்பகுதியில் வேகத்தடை அமைப்பது வாபஸ் பெறப்பட்டது.