மாடு குறுக்கே வந்ததால் விபத்து:மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

மாடு குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி வாலிபர் பலியானார்.

Update: 2023-02-13 18:45 GMT


மரக்காணம், 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் கூனிமேடு ஆகிய பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலைகளில் அதிக அளவு மாடுகள் சுற்றி திரிகின்றன. வாகன ஓட்டிகள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி உயிரிழப்பது, பள்ளத்தில் விழுந்து உயிர் இழப்பது நடந்து வருகிறது. அதுபோல நேற்று மாடு ஒன்று சாலையின் குறுக்கே வந்ததால் விபத்து ஏற்பட்டு வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்.

அதன் விவரம் வருமாறு:-

பெட்ரோல் நிரப்ப..

மரக்காணம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகன் சுவேந்திரன் (வயது 23). இவரும் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிமாறனும் (17) நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்ப மரக்காணத்திலிருந்து நாரவாக்கத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றனர். மோட்டார் சைக்கிளை சுவேந்திரன் ஓட்டிச் சென்றார்.

பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் சென்றபோது, குறுக்கே வந்த மாட்டின் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை சாலையோரம் திருப்பினார்.

மரத்தில் மோதி பலி

அப்போது எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் உள்ள மரத்தில் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்டு இருவரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிமாறன் இறந்து விட்டார். விபத்து குறித்து மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் தொடர் விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்க, அதிகாரிகள் மாடுகளை அப்புறப்படுத்தி அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்