புவனகிரி அருகேகார் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; மாணவர் பலி

புவனகிரி அருகே நின்ற கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-05-07 18:45 GMT

புவனகிரி, 

எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்

புவனகிரி முத்தாச்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மகன் செந்தில்குமார் (வயது 17). புவனகிரியில் உள்ள ஒரு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்த இவர், பொதுத்தேர்வு எழுதிவிட்டு கோடை விடுமுறையில் வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை செந்தில்குமார் மோட்டார் சைக்கிளில் பெருமத்தூர் கிராமம் நோக்கி புறப்பட்டார்.

லாரி மீது மோதல்

புவனகிரி-விருத்தாசலம் சாலையில் சென்றபோது, மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மோதியது. அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில், பலத்த காயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விபத்தில் பலியான மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோரிக்கை

புவனகிரியில் இருந்து விருத்தாசலம் வரை சாலை விரிவாக்கப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் லாரி உள்ளிட்ட வாகனங்கள் சாலையின் குறுக்கே ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகிறது. எனவே சாலை விரிவாக்கப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்