மோட்டார் சைக்கிள் மோதி தலைமையாசிரியர் பலி

மோட்டார் சைக்கிள் மோதி தலைமையாசிரியர் பலி

Update: 2022-06-15 20:02 GMT

கும்பகோணம் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் தலைமையாசிரியர் பலியானார். தனது லைசென்சை புதுப்பிக்க சென்றபோது விபத்தில் சிக்கி பலியானார்.

தலைமையாசிரியர்

தஞ்சை கரந்தை சிவப்பிரகாசம் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜூ(வயது 55). இவர், பாபநாசம் அருகே உள்ள தேவன்குடியில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக வேலை பார்த்து வந்தார்.

இவர் தனது ஓட்டுனர் உரிமத்தை(லைசென்சை) புதுப்பிப்பதற்காக நேற்று காலை தனது சகோதரர் குணசேகரனுடன் பட்டீஸ்வரத்தை அடுத்த தென்னூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.

மோட்டார் சைக்கிள் மோதி பலி

அப்போது அந்த வழியாக பிளஸ்-2 படிக்கும் 17 வயது சிறுவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த ராஜூ மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜூ படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்றோர் மீது நடவடிக்கை

18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் லைசென்சு இல்லாமல் வாகனத்தை இயக்கி விபத்துக்குள்ளானால், சிறுவர்களின் பெற்றோர்களை கைது செய்ய அரசியலமைப்பு சட்டம் இருப்பதால் கோர்ட்டு வழிகாட்டுதலின் படி விபத்தை ஏற்படுத்திய சிறுவன் மற்றும் அவனது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்