மோட்டார் சைக்கிள்-கார் மோதல்; 2 வாலிபர்கள் பலி

நெல்லையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக பலியானார்கள்.

Update: 2022-06-25 20:08 GMT

நெல்லையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக பலியானார்கள்.

விபத்து

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி நம்பிதோப்பு இந்திரா காலனியை சேர்ந்த முருகன் மகன் ஜாய் அஸ்வின் (வயது 18). பணகுடி முல்லைநகர் முத்துசாமிபுரத்தை சேர்ந்த செல்வன் மகன் சாம் ஜோயல் (17). இவர்கள் 2 பேரும் நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் நெல்லைக்கு வந்தனர்.

நெல்லை ரெட்டியார்பட்டி நான்கு வழிசாலையில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே மற்றொரு வழித்தடத்தில் ஏமன்குளம் உதயநேரியை சேர்ந்த ராஜ்குமார் (45) என்பவர் ஒரு காரில் வந்தார். அந்த கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது மோதி மறுமுனைக்கு பாய்ந்தது.

2 பேர் பலி

அந்த கார் அந்த வழியாக வந்து கொண்டிருந்த ஜாய் அஸ்வின், சாம் ஜோயல் ஆகியோர் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.

அந்த வழியாக சென்றவர்கள், 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே ஜாய் அஸ்வின் பரிதாபமாக இறந்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சாம் ஜோயலும் சிகிச்சை பலனின்றி இரவில் பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

மேலும் காரில் வந்த ராஜ்குமாரும் காயம் அடைந்து, ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்