பிரசவத்திற்கு பிறகு வெறும் தரையில் குழந்தைகளோடு தாய்மார்கள்... அரசு மருத்துவமனை டீன் விளக்கம்

நெல்லை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் பிரசவம் முடிந்த பெண்கள் தங்களின் பச்சிளம் குழந்தையுடன் தரையில் படுத்துள்ள வீடியோக்கள் பரவியது.

Update: 2022-09-23 10:31 GMT

நெல்லை,

நெல்லை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் நெல்லை மட்டு மல்லாமல் தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற அண்டை மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

குறிப்பாக இங்கு நாள்தோறும் சராசரியாக 3 ஆயிரம் பேர் புற நோயாளிகளாகவும், 1,300 பேர் வரை உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். இதுபோன்ற சிறப்புகளைக் கொண்ட இந்த அரசு மருத்துவமனையில் சமீபகாலமாக சிகிச்சை அளிப்பதிலும், நோயாளிகளுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதிலும் குறைபாடு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

மேலும், நோயாளிகளின் ரத்த பரிசோதனை முடிவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் பொதுமக்கள் நாள் கணக்கில் காத்து கிடக்கின்றனர். இது தொடர்பான வீடியோவும் வலைத்தளங்களில் வெளியானது. இந்த நிலையில் மேலும் ஒரு சம்பவமாக நெல்லை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் பிரசவம் முடிந்த பெண்கள் தங்களின் பச்சிளம் குழந்தையுடன் தரையில் படுத்து கிடக்கும் வீடியோக்கள் பரவி வருகிறது.

அந்த வீடியோவில் தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகள் மற்றும் துணிகள் உள்ளிட்ட உடைமைகளுடன் தரையில் படுத்துள்ளனர். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிர்வாகத்தினர் போதிய படுக்கைகள் ஒதுக்கி கொடுக்காத்தால் தான் இந்த அவலம் ஏற்பட்டுள்ளதாக பலரும் புகார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ரவிச்சந்திரன் கூறியதாவது:-

சமூக வலைதளங்களில் பரவுகின்ற வீடியோ எடுக்கப்பட்ட இடம் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பின் பேறுகால கவனிப்பு பகுதி ஆகும். அறுவை சிகிச்சை இல்லாமல், சுக பிரசவங்கள் முடிந்து 3 நாட்களுக்கு பின்னர் பொதுவாக தாய்மார்கள் எழுந்து நடக்க ஆரம்பித்து விடுவார்கள்.

அப்படிப்பட்டவர்களை 10 நாட்கள் வரை பராமரிப்பதற்காக உள்ள வார்டு தான் இந்த பகுதி. இதில் வார்டை சுத்தம் செய்யும் பணி நடந்த போது மாலை நேரத்தில் அங்கு இருந்த தாய்மார்கள் தங்களது குழந்தைகள் மற்றும் உடமைகளுடன் காற்றுக்காக அங்குள்ள வராண்டாவில் அமர்ந்திருந்த போது வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. வேறு வதந்திகள் எதையும் நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்