4 பெண் குழந்தைகளின் தாய் விபத்தில் பலி
4 பெண் குழந்தைகளின் தாய் விபத்தில் பலியானாா்.
விக்கிரவாண்டி:
செஞ்சி-கொத்தமங்கலம் ரோடு கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் குணசேகரன். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி எட்வின் குயின்(35). இந்த தம்பதிக்கு வெற்றிச்செல்வி, கீர்த்தனா, பிரித்தி, வரலட்சுமி ஆகிய 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கப்பியாம்புலியூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு சங்கத்துக்கு ஆள்சேர்ப்பு நேர்முக தேர்விற்கு கலந்து கொள்ள எட்வின் குயின், தனது உறவினர் அறிவழகன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். முண்டியம்பாக்கம் ரெயில்வே கேட் அருகில் சென்றபோது, பின்னால் வந்த டாரஸ் லாரி எதிர்பாராதவிதமாக இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக எட்வின்குயின் மட்டும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி எட்வின்குயின் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.