மரத்தின் மீது கார் மோதி மாமியார்- மருமகள் பலி
மேல்பாடி அருகே மரத்தின் மீது கார் மோதியதில் மாமியார்- மருமகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தந்தை- மகன் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
மரத்தின் மீது கார் மோதல்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 45), ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருடைய தந்தை துக்காராமன் (80), தாய் லலிதா (75), மனைவி சசிகலா (34), 9-ம் வகுப்பு படிக்கும் மகள் மஹதி (14). இவர்கள் நேற்று காட்பாடியில் நடைபெற்ற உறவினர் இல்ல மஞ்சள் நீராட்டு விழாவிற்கு சென்றனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் சோளிங்கருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். குமரேசன் காரை ஓட்டினார். திருவலம்- பொன்னை சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. மேல்பாடியை அடுத்த தேன்பள்ளி பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
மாமியார்- மருமகள் பலி
இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தில் குமரேசனின் மனைவி சசிகலா, தாய் லலிதா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குமரேசன், அவரது தந்தை துக்காராமன், மகள் மஹதி ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த மேல்பாடி போலீசார் விரைந்து சென்று லலிதா மற்றும் சசிகலா ஆகிய இருவரின் உடல்களை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்துகுறித்து மேல்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.