மகன் இறந்த துக்கம் தாங்காமல் ரெயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை

மகன் இறந்த துக்கம் தாங்காமல் காட்பாடியில் ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்டார். அதே நேரத்தில் ரெயிலுக்காக காத்திருந்த வடமாநில பயணி ஒருவர் மாரடைப்பில் இறந்தார்.

Update: 2023-02-28 12:30 GMT

காட்பாடி

மகன் இறந்த துக்கம் தாங்காமல் காட்பாடியில் ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்டார். அதே நேரத்தில் ரெயிலுக்காக காத்திருந்த வடமாநில பயணி ஒருவர் மாரடைப்பில் இறந்தார்.

இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

வாலிபர் பலி

வேலூர் மாநகராட்சி சைதாப்பேட்டை பழைய காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி காஞ்சனா (வயது 45). கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமார் இறந்து விட்டார்.

அதன்பின் காஞ்சனா அவரது மகன் ஆனந்தன் (25) வசித்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருச்சிக்கு சென்ற ஆனந்தன் மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்துவிட்டார்.

இதனால் காஞ்சனா மிகவும் சோகத்தில் இருந்து வந்தார்.

கணவரும் இல்லை, பெற்ற மகனும் விபத்தில் இறந்துவிட்டதால் காஞ்சனாவால் துக்கம் தாங்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த காஞ்சனா தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

இன்று காலை காட்பாடி ரெயில் நிலையத்திற்கு சென்றார். அங்கு 2-வது பிளாட்பாரத்தில் ரெயில்வே போலீஸ் நிலையத்தை கடந்து சென்றார்.

அப்போது காலை 7.40 மணிக்கு பெங்களூருவில் இருந்து சென்னை வழியாக டெல்லி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் நின்ற அந்த ரெயில் மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டது.

அப்போது சிறிது தொலைவில் காஞ்சனா ஓடி சென்று ரெயில் முன்பு தண்டவாளத்தின் நடுவில் நின்றார்.

அவர் ரெயிலை நோக்கி கைகளை அசைத்தபடி நின்று கொண்டே இருந்தார். இதனை கண்ட ரெயிலையை இயக்கிய டிரைவர்கள் உடனே அலாரத்தை ஒலித்தபடி பிரேக் போட்டு ரெயிலை நிறுத்த முயன்றனர்.

ஆனாலும் ரெயில் நிற்காமல் காஞ்சனா மீது ரெயில் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதனை நேரில் பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் சென்று ரெயிலுக்கு அடியில் சிக்கிக் கிடந்த காஞ்சனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து ரெயில் தாமதமாக புறப்பட்டு சென்றது.

மாரடைப்பில் பயணி சாவு

காஞ்சனா உடலை மீட்கும் பணிகள் நடந்து கொண்டிருந்தபோதே முதலாவது பிளாட்பாரத்தில் ரெயிலுக்காக காத்திருந்த வட மாநில பயணி ஒருவர் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்தார்.

இதனைக் கண்டு அவரது குடும்பத்தினர் அலறி துடித்தனர்.

சத்தம் கேட்டு ரெயில்வே போலீசார் அங்கு சென்றனர். விசாரணையில் இறந்தவர் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ராம் கிருபா (54) என்பது தெரியவந்தது. அவர் குடும்பத்துடன் வேலூருக்கு சுற்றுலா வந்துள்ளார்.

ரெயிலுக்காக காத்திருந்த நேரத்தில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது தெரியவந்தது.

காட்பாடி ரெயில் நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் பரபரப்பும், சோகமும் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்