பச்சிளங்குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்ற தாய் கைது
உடுமலை அருகே பச்சிளங்குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்ற தாய் கைது செய்யப்பட்டார்.
உடுமலை அருகே பச்சிளங்குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்ற தாய் கைது செய்யப்பட்டார்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காதல் திருமணம்
உடுமலையை அடுத்த தீபாலபட்டியைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது 28). இவரும், வசந்தி (26) என்ற பெண்ணும் காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு பெற்றோர் சம்மத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தீபாலபட்டியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு வசந்தி கர்ப்பமானார். அதைத்தொடர்ந்து வசந்தியின் பெற்றோர் அவரை அழைத்துச்சென்று சசிக்குமாருக்கு தெரியாமல் கருவை கலைத்து விட்டனர்.
இதனால் கணவன்-மனைவிக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த சூழலில் வசந்திக்கு வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் அந்த நபரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அதன் பின்பு அவருடன் சிறிது காலம் குடும்பம் நடத்திய வசந்தி கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டும் பிரிந்தார்.
பெண் குழந்தை
பின்னர் முதல் கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்து அவருடன் வாழ்ந்து வந்தார். இந்த சூழலில் வசந்தி 2-வது முறையாக கர்ப்பம் தரித்து கடந்த மாதம் 3-ந்தேதி உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
சசிக்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் அடிக்கடி குடித்து விட்டு வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சசிக்குமார் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த வசந்தி திடீரென தண்ணீர் தொட்டிக்குள் தனது குழந்தையை தூக்கிப் போட்டதாக தெரிகிறது. அதை மறைப்பதற்காக குழந்தை தொட்டியில் கை தவறி விழுந்து விட்டது என்று கணவரிடம் கூறி நாடகமாடியுள்ளார். பின்னர் குழந்தையை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது, பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த தளி போலீசார் வசந்தியிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்து உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வசந்தியிடம் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். இதனை தொடர்ந்து அவர் தண்ணீர் தொட்டியில் குழந்தையை மூழ்கடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.
தாய் கைது
இதையடுத்து போலீசார் வசந்தியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதில் பிரச்சினை இருந்ததாகவும், இதனால் குழந்தையை கொலை செய்ததாகவும் போலீசாரிடம் வசந்தி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிறந்து 35 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை பெற்ற தாயே தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.