துடியலூர்
துடியலூர் அருகே மின்சாரம் தாக்கி தாய்-மகள் சாவு வெந்நீர் போட்டு குளிக்க சென்ற போது இந்த பரிதாபம் சம்பவம் நடந்தது.
குளிக்க சென்றார்
கோவை துடியலூர் அருகில் உள்ள விஸ்வநாதபுரம் மீனாட்சி கார்டன் பகுதியில் வசிப்பவர் ஆனந்த். இவர் திருச்சியில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். வீட்டில் அவரது மனைவி கார்த்திகா (வயது 52) மற்றும் மகள் அர்ச்சனா (18) ஆகியோர் உள்ளனர். அர்ச்சனா தனியார் கல்லூரியில் பயோடெக் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை அர்ச்சனா கல்லூரி செல்வதற்கு நேரம் ஆனதால்,அவசர, அவசரமாக குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்றுள்ளார். வெந்நீரில் குளிப்பதற்காக அங்கிருந்த வாளியில் தண்ணீரை நிரப்பி அதி்ல் வாட்டர் ஹீட்டர் கருவியை போட்டு சுவிட்சை ஆன் செய்தார். சிறிது நேரத்தில் வாளித்தண்ணீர் சூடாக ஆரம்பித்தது.
தாய்-மகள் சாவு
இந்த நிலையில் அர்ச்சனா சுவிட்சை ஆப் செய்து விட்டு, வாட்டர் ஹீட்டரை எடுக்காமல் குளிக்க தண்ணீரை தொட்டபோது தீடீரென அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது.
இதனால் அவர் அலறித்துடித்தார். இதனை அறிந்ததும், சமையல் அறையில் இருந்து ஓடிவந்த அவரது தாய், மகளை காப்பாற்ற முயன்றார். இதனால் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதற்கிடையில் காலை 9 மணிக்கு அர்ச்சனாவை அழைத்துச் செல்ல கால்டேக்ஸி டிரைவர் வந்துள்ளார்.
அவர் காலிங் பெல் மற்றும் செல்போன் மூலம் அழைத்தும் அவர்கள் போனை எடுக்காததால் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது குளியல் அறையில் தாய், மகள் 2 பேரும் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தது தெரிய வந்தது. உடனே அவர்கள் மின் சாரத்தை துண்டித்து விட்டு, துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சோகம்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துடியலூர் போலீசார் இறந்து கிடந்த தாய், மகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் மின்சாரம் தாக்கி தாய் மற்றும் மகள் இறந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.