கொரோனா சிறப்பு உதவித்தொகை வழங்கக்கோரி கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
கொரோனா சிறப்பு உதவித்தொகை வழங்கக்கோரி கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கொரோனா சிறப்பு உதவித்தொகை வழங்கக்கோரி கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நடந்தது. இதையடுத்து திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இந்த நிலையில் வடமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, கொரோனா சிறப்பு ஊக்கத்தொகை கேட்டு மனு கொடுக்க வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து களப்பணியாளர்கள் சார்பில் சிலர் மட்டும் சென்று கலெக்டரிடம் மனு கொடுக்கும்படி போலீசார் அறிவுறுத்தினர். அதையடுத்து கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
ஆக்கிரமிப்பு
அந்த மனுவில், கொரோனா காலத்தில் சுகாதாரத்துறையினருடன் இணைந்து கொசு ஒழிப்பு களப்பணியாளர்களும் ஈடுபட்டனர். அதற்காக சிறப்பு ஊக்கத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் கொசு ஒழிப்பு களப்பணியாளர்களுக்கான சம்பளமாக மாதம் ரூ.402 வழங்கப்படுகிறது. இதனை ரூ.500 ஆக உயர்த்த வேண்டும். அதனையும் 3 மாதத்துக்கு ஒருமுறை வழங்காமல் மாதந்தோறும் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதையடுத்து முதியவர் ஒருவர் சக்கர நாற்காலியில் வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் திண்டுக்கல் சிலுவத்தூர் ரோடு பாம்பாட்டி சந்து பகுதியை சேர்ந்த பாபுராஜ் (வயது 75) என்பதும், அவருக்கு சொந்தமான வீட்டை மர்மநபர்கள் ஆக்கிரமித்ததோடு, முதியவரையும் தாக்கியதாவும், வீட்டை மீட்டுத்தரும்படி கேட்டு கலெக்டரிடம் மனு கொடுக்க வேண்டும் என்றார்.
223 மனுக்கள்
ஆனால் அவர் மனு ஏதும் எடுத்து வரவில்லை. இதையடுத்து போலீசாரே அவருக்கு மனு எழுத உதவி செய்து, கலெக்டரிடம் அழைத்துச்சென்று முதியவரை மனு கொடுக்க வைத்தனர். அவரை தொடர்ந்து திண்டுக்கல் ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி நாகலட்சுமி கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எனக்கு கடந்த ஆண்டு (2021) மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகையாக ரூ.1000 வழங்குவது தொடர்பான ஆணை கிடைத்தது.
ஆனால் இதுவரை உதவித்தொகை கிடைக்கவில்லை. எனவே உதவித்தொகையை பெற்றுத்தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மேற்கண்ட மனுக்கள் உள்பட மொத்தம் 223 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதையடுத்து விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண தொகை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.