விவசாயிகள் இருமடங்கு குறுவை சாகுபடி செய்ய வேண்டும்

மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் இருமடங்கு குறுவை சாகுபடி செய்ய வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் கூறியுள்ளாா்

Update: 2022-06-01 17:45 GMT

திருவாரூர்;

மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் இருமடங்கு குறுவை சாகுபடி செய்ய வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் கூறியுள்ளாா். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இரு மடங்கு குறுவை சாகுபடி

மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் குறுவை சாகுபடி பாசனத்துக்கு ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு முன் கூட்டியே காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக கடந்த 24-ந் தேதி மேட்டூர் அணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் கல்லணையிலிருந்து குறுவை சாகுபடி பாசனத்திற்கு 27-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதை விவசாயிகள் நன்கு பயன்படுத்தி திருவாரூர் மாவட்டத்தில் இருமடங்கு குறுவை சாகுபடி செய்ய வேண்டும்.

உளுந்து சாகுபடி

முன்கூட்டியே குறுவை சாகுபடி மேற்கொள்வதால் வடகிழக்கு பருவ மழையால் குறுவை அறுவடையின் போது, மழையால் பாதிப்பு ஏற்படாது. மேலும சம்பா மற்றும் தாளடி சாகுபடியை முன்கூட்டியே செய்ய இயலும். குறுவை சாகுபடி செய்ய இயலாத விவசாயிகள் உளுந்து மற்றும் மக்காச்சோளம் போன்ற பயிர்களை சாகுபடி செய்யலாம்.உளுந்து சாகுபடி செய்யும் போது ஒரு எக்டேருக்கு 700 முதல் 800 கிலோ மகசூல் எடுக்க வாய்பு உள்ளது.மண் வளத்தை பாதுகாக்க குறுவை சாகுபடி செய்யாத இடங்களில் பசுந்தாள் பயிரை சாகுபடி செய்யலாம். குறுவை சாகுபடி பரப்பு நடப்பாண்டில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்விவசாயிகள் குறுவை பயிருக்கு தேவையான அளவு மட்மே வேளாண்துறையின் பரிந்துரையின் அடிப்படையில் ரசாயன உரங்களை பயன்படுத்த வேண்டும்.

50 சதவீத மானியம்

அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் குறுவை நெல் சாகுபடிக்கு தேவையான பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயிர் உரங்களான அசோஸ்பைரியம், பாஸ்போ பாக்டீரியா மற்றும் அசோபாஸ் போன்ற திரவ உயிர் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.நெற்பயிருக்குத் தேவையான அனைத்து நுண்ணூட்டங்களும் அடங்கிய நுண்ணூட்ட கலவையான நெல் நுண்ணூட்ட உரம் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இதை விவசாயிகள் பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்