லாரிகளுக்கு இடையில் மொபட் சிக்கி: அண்ணன்- 2 தங்கைகள் உடல் நசுங்கி பலி
மொபட்டில் சென்றபோது 2 லாரிகளுக்கு இடையில் சிக்கி அண்ணன், 2 தங்கைகள் உடல் நசுங்கி பலியாகினர்.
தர்மபுரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் தாம்சன்பேட்டையை சேர்ந்தவர் சிவசந்திரன். பழைய இரும்பு கடை வைத்துள்ளார். இவருக்கு மணிகண்டன் (வயது 35) என்ற மகனும், லாவண்யா (25), இந்துமதி (20) ஆகிய மகள்களும் இருந்தனர். டிப்ளமோ என்ஜினீயரான மணிகண்டனுக்கு திருமணம் ஆகவில்லை.
இந்தநிலையில் பல் சிகிச்சைக்காக லாவண்யா தர்மபுரியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்று மணிகண்டனிடம் கூறினார். அதன்படி நேற்று மாலை மணிகண்டன் தனது தங்கைகள் லாவண்யா மற்றும் இந்துமதியை மொபட்டில் அழைத்து கொண்டு தர்மபுரிக்கு புறப்பட்டார்.
லாரி மோதியது
இந்த மொபட் தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி பகுதியில் பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றது. அப்போது முன்னால் மெதுவாக சென்ற கன்டெய்னர் லாரியை மணிகண்டன் முந்த முயன்றார். இதனால் அவர் மோட்டார் சைக்கிளை வலது புறமாக திருப்பினார்.
அந்த நேரம் சேலத்துக்கு வெங்காயம் ஏற்றி சென்ற லாரி மோட்டார் சைக்கிளின் பின் பக்கம் மோதியது. மேலும் முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதி, மணிகண்டன், லாவண்யா, இந்துமதி ஆகியோரை நசுக்கியது.
இந்த கோர விபத்தில் லாரிகளுக்கு இடையில் சிக்கி மணிகண்டன், லாவண்யா, இந்துமதி ஆகியோர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருமணம் நிச்சயமான பெண்
லாரி மோதி உடல் நசுங்கி பலியான லாவண்யா பட்டதாரி ஆவார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, 2 மாதங்களில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான முன்னேற்பாடு பணிகளில் அவருடைய குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில், லாவண்யா உள்பட 3 பேரும் விபத்தில் சிக்கி பலியாகினர். இதனால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது.