தடுப்பு சுவரில் மொபட் மோதி பெண் பலி
தடுப்பு சுவரில் மொபட் மோதியதில் பெண் பலியானார்.
திருமானூர் அருகே உள்ள திடீர்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி கல்யாணி (வயது 45), கூலி தொழிலாளி. இவர் தனது மருமகள் சினேகா (21), பேரன் ஆர்த்திக் (2) ஆகியோருடன் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குட்டக்கரையில் உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு மொபட்டில் நேற்று காலை சென்றார்.
பின்னர் அவர்கள் 3 பேரும் தங்களது வீட்டிற்கு செல்வதற்காக திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உடையார்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தார். மொபட்டை சினேகா ஓட்டி சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக தடுப்பு சுவர் மீது மொபட் மோதியது. இதில், 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.
இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்கள் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கல்யாணியை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து, சினேகா மற்றும் அவரது மகன் ஆர்த்திக் ஆகியோருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் வேல்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.