படப்பை அருகே மொபட்-பஸ் மோதல்; 5-ம் வகுப்பு மாணவி பலி - தாய் கண்எதிரே பரிதாபம்

படப்பை அருகே மொபட்- பஸ் மோதிய விபத்தில் 5-ம் வகுப்பு மாணவி பலியானார்.

Update: 2022-12-02 12:03 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் திருவேங்கடம் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கனகவேல் (வயது 40), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவருடைய மனைவி நிஷாந்தி, (வயது 34), தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார். இவர்களது மகள் ஷிரிஸ்திகா (வயது 10). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

வழக்கம்போல் நிஷாந்தி மகள் ஷிரிஸ்திகாவை நேற்று மொபட்டில் பள்ளிக்கு அழைத்து சென்றார். முருகாத்தம்மன் கோவில் கரசங்கால் அருகே வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் மொபட் சென்று கொண்டிருந்தது.

அப்போது பின்னால் வந்த தனியார் தொழிற்சாலை பஸ் மொபட் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டதில் பள்ளி மாணவி ஷிரிஸ்திகா படுகாயமடைந்து துடி துடித்தார். மாணவியை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு படப்பை அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்