மூலவைகை ஆறு வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

மூலவைகை ஆறு வறண்டதால் கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2023-08-13 18:45 GMT

மூலவைகை ஆறு

கடமலை-மயிலை ஒன்றியத்தில் 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு மூலவைகை ஆற்றில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் மூலவைகை ஆற்றின் மூலம் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் தென்னை, முருங்கை உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. ஆறு உற்பத்தியாகும்

வருசநாடு அருகே உள்ள வெள்ளிமலை வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக போதிய அளவில் மழை பெய்யவில்லை. அதன் காரணமாக ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது. கடந்த மாதம் ஆறு முழுமையாக வறண்டது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக கடமலை-மயிலை ஒன்றியத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

குடிநீர் தட்டுப்பாடு

சில கிராமங்களில் நீர்மட்டம் அபாய அளவை தாண்டியுள்ளது. எனவே உறை கிணறுகளை தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் உறை கிணறுகளை தூர்வாரினாலும் அதில் உள்ள நீரை அடுத்த 2 மாதங்கள் மட்டுமே கிராமங்களுக்கு வழங்க முடியும்.

இதற்கிடையே மழை பெய்தும் ஆற்றில் நீர்வரத்து இல்லை என்றால் கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் தட்டுப்பாடு அபாயத்தை போக்க அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்