கட்டிட மாடியில் குரங்குகள் சண்டை
வேலூர் அரசு மருத்துவமனையில் கட்டிட மாடியில் குரங்குகள் சண்டையிட்டபோது கீழே விழுந்த குரங்கு படுகாயம் அடைந்தது.
அடுக்கம்பாறை
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்டவைகள் உள்ளன.
இந்த மருத்துவமனையில் ஏராளமான குரங்குகள் சுற்றி திரிகின்றன. இவைகளை பிடித்து வனத்துறையில் ஒப்படைக்க பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மருத்துவமனையில் சுற்றி தெரியும் குரங்குகள் நோயாளிகளின் உறவினர்கள் கொண்டு வரும் தின்பண்டங்களை பிடிங்கி சாப்பிடுகின்றன.
இந்த நிலையில் நேற்று அறுவை சிகிச்சை பிரிவு கட்டிடத்தின் மேல் மாடியில் 2 குரங்குகள் ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டு கொண்டன.
இதில் நிலைத்தடுமாறிய ஒரு குரங்கு மாடியிலிருந்து, கீழே விழுந்து படுகாயம் அடைந்தது.
அப்போது அங்கு வந்த நாய்கள் குரங்கை கடிக்க துரத்தியது. பயந்து போன குரங்கு பயங்கர சத்தத்துடன் கூச்சல் போட்டது.
இதனை பார்த்த ஒப்பந்த பணியாளர் ஒருவர் நாய்களிடமிருந்து குரங்கை மீட்டு, வேலூர் வனத்துறையினரிடம் நேற்று ஒப்படைத்தார்.
கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அந்த குரங்குக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு காட்டில் விடப்பட்டது.
இதுபோன்று உணவுகள் இன்றி சுற்றி திரியும் குரங்குகளை பிடித்து காட்டில் விட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆவலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
--