ஓணாங்குடி ஊராட்சியில் குரங்குகள் அட்டகாசம்

ஓணாங்குடி ஊராட்சியில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-04-06 19:36 GMT

ஓணாங்குடி ஊராட்சி

அரிமளம் ஊராட்சி ஒன்றியம் ஓணாங்குடி ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இப்பகுதி விவசாயிகள் நெல், கடலை, சோளம், துவரை, உளுந்து, தட்டைப்பயறு, கம்பு, கேழ்வரகு, தென்னை, மா, பலா, கொய்யா உள்ளிட்டவைகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகிறார்கள். ஆனால் இப்பகுதியில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்து வருகிறார்கள்.

எனவே இந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

குரங்குகள் தொல்லை

ஓணாங்குடி கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து:- எனது தோட்டத்தில் மா, கொய்யா, தென்னை, பலா உள்ளிட்ட பல்வேறு மரங்கள் உள்ளன. ஆனால் இந்த மரங்களை குரங்குகளிடம் இருந்து பாதுகாக்க எங்களால் முடியவில்லை. இந்த மரத்தில் உள்ள பழங்கள் எதையும் நாங்கள் பறித்து விற்பனை செய்தது கிடையாது. அனைத்து பழங்களையும் குரங்குகள் நாசப்படுத்தி விடுகின்றன. இது மட்டுமின்றி நெல், எள், துவரை போன்ற பயிர்களை குரங்குகள் பிடுங்கி நாசம் செய்து விடுகிறது. எனவே இப்பகுதியில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்தால் மட்டுமே தொடர்ந்து விவசாயம் செய்ய முடியும். இல்லையெனில் விவசாயம் செய்ய முடியாத நிலைமைக்கு தள்ளப்படுவோம்.

குடும்ப கட்டுப்பாடு

சத்திரம் கிராமத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன்:- நாங்கள் இயற்கை விவசாயம் செய்து வருகிறோம். முன்பெல்லாம் காடுகள் அடர்த்தியாக நெருக்கமாக இருந்தன. இயற்கை காடுகள் இருந்ததால் குரங்குகள் விவசாய பகுதிக்குள் போகவில்லை. இப்போது அரிமளம் ஒன்றியம் முழுவதும் தைலமரக்காடுகளாக மாறிவிட்டன. தைலமரக்காடுகளாக இருப்பதால் குரங்குகள் சாப்பாட்டிற்காக ஊருக்குள் புகுந்து விடுகின்றன. ஆந்திர மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகளை பிடித்து குடும்ப கட்டுப்பாடு செய்தார்கள். ஆனால் தமிழ்நாட்டில் விவசாயம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தும் அரசு இதைப்பற்றி கண்டு கொள்வதில்லை. குரங்குகளுக்கு வனப்பகுதிக்குள் மிகப்பெரிய தண்ணீர் தொட்டிகள் கட்டி அதில் தண்ணீர் நிரப்பி அதோடு அதற்கு தேவையான உணவுப்பொருட்களை அங்கே வைத்தால் நிச்சயம் ஊருக்குள் வராது. பயிர்கள் நாசம் அடையாது. குரங்குகளின் இனப்பெருக்கத்தை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அரிமளத்தில் குரங்கு கடித்து 2 பேர் இறந்து உள்ளனர்.

வீட்டின் ஓட்டை பிரித்து...

ஓணாங்குடி கிராமத்தைச் சேர்ந்த கவிதா:- எங்களுடைய வீடு ஓட்டு வீடு. குரங்குகள் கும்பல் கும்பலாக வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்து விடுகின்றன. வீட்டில் யாரும் இல்லை என்றால் சாதம், குழம்பு ஆகியவற்றை சாப்பிட்டுவிட்டு பின்னர் அவற்றை தரையில் கொட்டி நாசம் செய்கின்றன. மேலும் வீட்டில் எந்த உணவு பொருள் இருந்தாலும் கொட்டி விடுகின்றன. வீட்டுக்குள் புகுந்த குரங்குகளை விரட்ட முடியவில்லை. அவை சீறிக்கொண்டு மேலே பாய வருகிறது. இதனால் நாங்கள் பயந்து வீட்டை விட்டு வெளியே ஓட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட்டால் தான் நிம்மதியாக வாழ முடியும்.

கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

சீகம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆனந்தி:- எங்கள் ஊராட்சியில் 250-க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன. நெல் பயிர்களை நாசம் செய்வதோடு, வாழை குருத்தை கூட உடைத்து விடுகிறது. தென்னை மரத்தில் இளநீர் பறித்து கீழே போட்டு விடுகிறது. கடலையை வயலில் இறங்கி விவசாயிகள் பறிப்பது போல் கடலை பறித்து தின்கின்றன. எள் வைத்திருந்தாலும் பிடுங்கி விடுகிறது. எனது கணவர் இறந்துவிட்டார். நான் எனது மகள் 2 பேர் மட்டும் தான். வயலில் செய்த விவசாயத்தை காப்பாற்ற கட்டாயம் ஒருவர் வயலில் எப்பொழுதும் இருந்தாக வேண்டும். எனது மகள் பள்ளிக்கு போகாமல் கூட பயிரை காப்பாற்ற குரங்குகளை விரட்ட வேண்டி உள்ளது. நாங்கள் கொல்லை மற்றும் வயல்களில் விவசாயம் செய்து தான் பிழைத்துக் கொண்டு வருகிறோம். ஆனால் குரங்குகள் இவ்வாறு தொந்தரவு செய்தால் நாங்கள் எப்படி விவசாயம் செய்ய முடியும். விவசாயம் செய்யும் ஆர்வமும் குறைந்து விடுகிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஓணாங்குடி ஊராட்சி பகுதியில் உள்ள 250-க்கும் மேற்பட்ட குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு போய் விட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்