சென்னிமலையில் வீடு-கடைகளில் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

சென்னிமலையில் வீடு-கடைகளில் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-03-15 20:19 GMT

சென்னிமலை

சென்னிமலையில் வீடு-கடைகளில் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குரங்குகள் அட்டகாசம்

சென்னிமலையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கே.குணசேகரன், கே.சத்தியமூர்த்தி மற்றும் கடை உரிமையாளர்கள், பொதுமக்கள் தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, ஈரோடு வனச்சரகருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர் அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

சென்னிமலை வனப்பகுதியில் ஏராளமான குரங்குகள் உள்ளன. இந்த குரங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி சென்னிமலை டவுன் பகுதிக்குள் வந்து விடுகின்றன. வீட்டு மொட்டை மாடிகளில் பெண்கள் ஏதாவது உணவு பொருட்களை காய போட்டிருந்தால் அதனை முற்றிலுமாக தின்று விடுகின்றன. மேலும் தண்ணீர் தொட்டியில் உள்ள குழாய்களில் தண்ணீரை திறந்து விட்டு சென்று விடுகின்றன. வீட்டுக்கு வெளியே குழந்தைகள் ஏதாவது தின்பண்டங்கள் சாப்பிட்டால் அதனையும் குரங்குகள் பிடுங்கி தின்பதுடன் குழந்தைகளையும் கடிக்க வருகிறது.

போராட்டம் நடத்தப்படும்

ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல கேபிள் ஒயர் மூலம் குரங்குகள் தொங்கி கொண்டு செல்வதால் கேபிள் ஒயர்கள் சேதமடைகின்றன. பழக்கடைகள் மற்றும் பூக்கடைகளில் உள்ள பழம், மாலைகள் ஆகியவற்றை எடுத்து சென்று விடுகிறது. அதேபோல் கடைகளில் விற்பனைக்காக அரிசி மூட்டைகளை வெளியே வைத்திருந்தால் அந்த மூட்டைகளையும் கிழித்து விடுகின்றன. எனவே உடனடியாக அனைத்து குரங்குகளையும் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்கள் சார்பில் ஈரோடு வனச்சரக அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்