பணம் திருடப்பட்ட வழக்கு: மாணவிக்கு ரூ.3 லட்சத்தை 'பேடிஎம்' நிறுவனம் வழங்க வேண்டும் -ஐகோர்ட்டு
பணம் திருடப்பட்ட வழக்கில் ரூ.3 லட்சத்தை மருத்துவ மாணவிக்கு 2 வாரங்களுக்குள் வழங்க ‘பேடிஎம்’ நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்கும் முதுகலை மாணவி பவித்ரா. இவர் சென்னை அமைந்தகரையில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் கணக்கு வைத்திருந்தார். அந்த கணக்கின் மூலம் 'பேடிஎம்' கணக்கும் தொடங்கியிருந்தார்.
இந்த நிலையில், அந்த வங்கிக்கணக்கில் இருந்து கடந்த 2021-ம் ஆண்டு பல்வேறு தொகையாக ரூ.3 லட்சம் மர்ம நபர்களால் திருடப்பட்டது. இதுகுறித்து வங்கி நிர்வாகத்திடம் பவித்ரா புகார் செய்தார். ஆனால், பணத்தை திருப்பித் தர வங்கி நிர்வாகம் மறுத்துவிட்டது. இதுதொடர்பான உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பவித்ரா வழக்கு தொடர்ந்தார்.
வெளிமாநில நபர்கள்
இந்த வழக்கை நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா விசாரித்தார். அப்போது, வங்கிக்கணக்கில் இருந்து இந்த பணம் திருடப்படவில்லை என்றும் 'பேடிஎம்' கணக்கு வாயிலாக இந்த பணம் எடுக்கப்பட்டுள்ளதாக வங்கித் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால், 'பேடிஎம்' நிர்வாகம் தரப்பில், இந்த திருட்டுக்கு பொறுப்பு ஏற்க முடியாது. பண பரிவர்த்தனை தொடர்பாக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. தங்கள் நிறுவனத்தின் மூலம் செய்யப்படும் பண பரிவர்த்தனை பாதுகாப்பானது என்று வாதிடப்பட்டது.
மனுதாரர் தரப்பில், பல தவணையாக மத்தியபிரதேசத்தை சேர்ந்த உத்தம்குமார், உத்தரபிரதேசத்தை சேர்ந்த பல்ராம் குமார் ஆகியோரது வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஊக்குவிப்பு
அனைத்து தரப்புகளின் வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, "மின்னணு பண பரிவர்த்தனைகள் செய்யும்படி, பொதுமக்களை ஊக்குவிக்கின்றனர். அதேநேரம், அதில் ஏதாவது மோசடி நடந்தால், அதற்கு பொறுப்பு ஏற்க எந்த நிறுவனமும் முன்வருவது இல்லை. அதுமட்டுமல்ல பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களை அலைக்கழிக்கவும் செய்கின்றனர். இந்த வழக்கில், 'பேடிஎம்' கணக்கு வாயிலாகத்தான் மனுதாரர் பணம் எடுக்கப்பட்டுள்ளதால், மனுதாரருக்கு 2 வாரங்களுக்குள் அந்த பணத்தை கொடுக்க 'பேடிஎம்' நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.