அரூர் அருகே துணி வியாபாரி வீட்டில் பணம், வெள்ளி பொருட்கள் திருட்டு; மர்ம நபர்கள் கைவரிசை
அரூர்
அரூர் அருகே துணி வியாபாரி வீட்டில் பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடி கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
துணி வியாபாரி
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கோபிநாதம்பட்டி கூட்டு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 47). துணி வியாபாரி. சம்பவத்தன்று இவர் குடும்பத்தினருடன் வீட்டில் உள்ள ஒரு அறையில் படுத்து தூங்கினார். வீட்டில் திடீரென சத்தம் கேட்டு படுக்கையில் இருந்து எழுந்த அவர் அறை கதவை திறக்க முயன்றார்.
அப்போது கதவு வெளிப்பக்கமாக தாழிடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அருகில் உள்ள உறவினருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர் ராஜாவின் வீட்டிற்கு வந்து கதவை திறந்தார். அதன்பின் வெளியே வந்த ராஜா வீட்டில் உள்ள மற்றொரு அறையை பார்த்தபோது திறந்து கிடந்தது.
பணம், வெள்ளிபொருட்கள் திருட்டு
மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவை பார்த்தபோது உள்ளே வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இரவில் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் ராஜா மற்றும் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்த அறையை வெளிப்பக்கமாக தாழிட்டுவிட்டு திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் கோபிநாதம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.