சேலத்தில் பக்கத்து வீட்டை பூட்டிவிட்டுதனியார் நிறுவன ஊழியர் வீட்டில் பணம் திருட்டுமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

Update: 2023-08-07 21:07 GMT

சேலம்

சேலத்தில் பக்கத்து வீட்டை பூட்டிவிட்டு தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தனியார் நிறுவன ஊழியர்

சேலம் அங்கம்மாள் காலனி குப்தா நகரை சேர்ந்தவர் சசிதரன் (வயது 37). இவர் தனியார் கிரானைட் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். அவரது அண்ணன் செந்தில்குமார் பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார். சசிதரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை செந்தில்குமார் வீட்டின் கதவின் தாழ்பாள் வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அவரால் வெளியே வர முடியவில்லை. பின்னர் அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்த கதவை திறந்தனர். இதையடுத்து செந்தில்குமார் வெளியே வந்தார். அப்போது அருகில் உள்ள சசிதரன் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பணம் திருட்டு

இதுதொடர்பாக அவர் சசிதரனுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவர் குடும்பத்துடன் சேலம் வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த ரூ.18 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில் சசிதரன் வெளியூர் சென்றதை நோட்டமிட்டு அங்கு வந்த மர்ம நபர்கள் செந்தில்குமார் வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு சசிதரன் வீட்டுக்குள் புகுந்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இந்த திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்