திண்டிவனத்தில்ஏ.டி.எம். மையங்களில் நூதன மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைதுபோலீஸ் போன்று நடித்து பணம் பறித்ததும் அம்பலம்

திண்டிவனத்தில் ஏ.டி.எம். மையங்களில் நூதன மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் போலீஸ் போன்று நடித்து பணம் பறித்ததும் விசாரணையில் தொியவந்தது.

Update: 2023-07-15 18:45 GMT


திண்டிவனம், 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம். மையங்களுக்கு வருபவர்களில், பணம் எடுக்க தெரியாதவர்களிடம் பணம் எடுத்து தருவதாக கூறி ஒரு கும்பல் பணத்தை திருடி நூதன மோசடியில் ஈடுபட்டு வந்தது.

இவர்களை பிடிக்க விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவின் பெயரில் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

81 போலி ஏ.டி.எம். கார்டுகள்

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வெள்ளிமேடுபேட்டை பகுதியில் இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வந்த, 2 பேரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

இதில் அவர்கள், திண்டுக்கல் மாவட்டம் மடூர் அடுத்த புகையிலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த துரைசாமி மகன் ஆபேல் (வயது 33), வேலூர் மாவட்டம் கொணவட்டம் பகுதியைச் சேர்ந்த ஜியாவுதீன் மகன் முதர்ஷீர் (38) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களின் உடைமைகளை சோதனை செய்த போது, 81 போலி ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் ரூ.48 ஆயிரம் இருந்தது.

பணம் பறிப்பு

இதையடுத்து இவர்கள் திண்டிவனம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க தெரியாதவர்களிடம் நூதன முறையில் பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது.

அதேபோல், ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுத்து செல்பவர்களை கண்காணித்து, அவர்களை பின்தொடர்ந்து சென்று மிரட்டி வழிப்பறியிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டிவனம் அடுத்த தாதாபுரத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன்(65) என்பவர் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து சென்றார்.

அப்போது வெள்ளிமேடுபேட்டை பகுதியில் அவரை வழிமறித்து, ஆபேல், முதர்ஷீர் ஆகியோர் போலீஸ் என்று கூறி, உங்கள் பையில் கஞ்சா வைத்துள்ளீர்களா என்று கேட்டுள்ளனர்.

மேலும் அவர்களது பையை சோதனை செய்வது போன்று நடித்து, ரூ. 51 ஆயிரத்தை பறித்து சென்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து, 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 81 போலி ஏ.டி.எம். கார்டுகள், ரூ.48 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்