பகுதிநேர வேலை தருவதாக கூறிஎன்ஜினீயரிடம் ஆன்லைன் மூலம் ரூ.2.46 லட்சம் மோசடிசைபர் கிரைம் போலீசார் விசாரணை
சேலம்
பகுதி நேர வேலை தருவதாக கூறி என்ஜினீயரிடம் ஆன்லைன் மூலம் ரூ.2.46 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்ஜினீயர்
சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த 31 வயதுடைய என்ஜினீயர் ஒருவர் வேலை தேடி வருகிறார். இந்த நிலையில் அவரது செல்போனுக்கு கடந்த மே மாதம் டெலிகிராம் ஐ.டி.யில் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதி நேர வேலையாக யூடியூப் சேனலில் வரும் வீடியோக்களை லைக் செய்து ஷேர் செய்தால் ஊதியம் தருவதாக கூறப்பட்டிருந்தது.
அதன்படி செய்ததால் என்ஜினீயரின் வங்கி கணக்கிற்கு ரூ.150 வந்தது. மீண்டும் அதே வேலையை செய்து ரூ.300 பெற்றார். இந்த நிலையில் மர்ம நபர் அவரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறினார்.
ரூ.2.46 லட்சம் மோசடி
இதை உண்மை என நம்பிய என்ஜினீயர் மர்ம நபர் தெரிவித்த வங்கி கணக்குகளுக்கு ரூ.2 லட்சத்து 56 ஆயிரத்து 600 செலுத்தினார். பல பரிவர்த்தனைகளுக்கு பிறகு என்ஜினீயரின் வங்கி கணக்கிற்கு கமிஷன் தொகையாக ரூ.10 ஆயிரத்து 250 வந்தது. அதன் பிறகு எந்த தொகையும் வழங்கப்பட வில்லை. மேலும் அந்த மர்ம நபரின் செல்போன் எண்ணும் `சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த என்ஜினீயர் இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மோசடி தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கைலாசம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.