பெண் உள்பட 2 பேரிடம் ரூ.13¾ லட்சம் மோசடி

சேலத்தில் பெண் உள்பட 2 பேரிடம் ரூ.13¾ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-05-06 20:05 GMT

சேலத்தில் பெண் உள்பட 2 பேரிடம் ரூ.13¾ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பகுதிநேர வேலை

சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் காயத்திரி (வயது 22). இவரது செல்போன் வாட்ஸ்-அப்புக்கு கடந்த மாதம் பகுதிநேர வேலைவாய்ப்பு குறித்த ஒரு தகவல் வந்தது. அதில் கொடுக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு காயத்திரி தொடர்பு கொண்டு பேசினார்.

இதையடுத்து அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு லிங்க் வந்தது. அதனை காயத்திரி பதிவிறக்கம் செய்தார். மேலும் பகுதி நேர வேலைக்காக காயத்திரி, அதில் கூறப்பட்டிருந்த வங்கி கணக்கிற்கு ரூ.8 லட்சத்து 97 ஆயிரம் அனுப்பினார்.

ஆனால் காயத்திரிக்கு பகுதிநேர வேலை தொடர்பாக தகவல் ஏதும் வரவில்லை. மேலும் ஏற்கனவே தொடர்பு கொண்ட செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. பின்னர் தான் அவர் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்து இதுகுறித்து மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் வாங்குவது....

சேலம் திருமலைகிரி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (30). இவர் குறைந்த விலையில் ஆன்லைன் மூலம் புதிதாக கார் வாங்க இணையதளத்தில் பார்த்தார். அப்போது அவரது முகநூலுக்கு குறைந்த விலையில் கார் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் ஒன்று வந்தது. அதை உண்மை என நம்பி அதில் குறிப்பிடப்பட்ட எண்ணுக்கு சுரேஷ் தொடர்பு கொண்டு பேசினார். இதில் ரூ.4 லட்சத்து 91 ஆயிரத்துக்கு கார் கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டது.

இந்த பணத்தை அவரது வங்கி கணக்குக்கு சுரேஷ் அனுப்பி வைத்தார். ஆனால் அதன்பிறகு கார் ஏதும் வழங்கப்படவில்லை. பின்னர் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச்-ஆப் என்று வந்தது.

இந்த மோசடி குறித்து சுரேஷ், மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்