ஆன்லைன் மூலம் பணபரிவர்த்தனை செய்யலாம்: அதிக பணம் எடுத்துச் செல்வதற்காக துப்பாக்கி லைசென்சு கேட்பதை ஏற்க முடியாது- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தொழில் நிமித்தமாக அதிக பணம் கொண்டு செல்லும்போது பாதுகாப்புக்காக துப்பாக்கி லைசென்சு கேட்பது ஏற்புடையதல்ல என்றும், ஆன்லைன் வழியாக பணப்பரிவர்த்தனை செய்யலாம் என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

Update: 2023-06-17 20:35 GMT


தொழில் நிமித்தமாக அதிக பணம் கொண்டு செல்லும்போது பாதுகாப்புக்காக துப்பாக்கி லைசென்சு கேட்பது ஏற்புடையதல்ல என்றும், ஆன்லைன் வழியாக பணப்பரிவர்த்தனை செய்யலாம் என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

லைசென்சு கேட்டு வழக்கு

மதுரையைச் சேர்ந்த கண்ணன், ராஜா ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எங்களது தொழில் நிமித்தமாக அதிக பணத்தை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்லும்போது பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள லைசென்சு கேட்டோம். ஆனால் எங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு உள்ளது. அதை ரத்து செய்து, எங்களுக்கு துப்பாக்கி லைசென்சுக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர்களின் தந்தை முத்தையா, திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்து உள்ளார். அப்போது அதிகாரத்தை பயன்படுத்தி மனுதாரர்கள் ஏற்கனவே துப்பாக்கி லைசென்சு பெற்று உள்ளனர். இந்த விவரம் தெரிந்தபின் துப்பாக்கி லைசென்சு ரத்து செய்யப்பட்டது என்றார்.

காட்டுக்குள் செல்ல அவசியம் என்ன?

விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

வனவிலங்குகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், அதிக பணம் கொண்டு செல்லும்போதும் பாதுகாப்பு கருதி துப்பாக்கி வைத்துக்கொள்ளவும் அனுமதிக்க வேண்டும் என மனுதாரர்கள் கோருகின்றனர். விலங்குகளுக்கான இடத்தில் மனுதாரர்கள் சுற்றித்திரிய எந்தவித அனுமதியும் கேட்க முடியாது.

காட்டுப்பகுதிக்குள் மனுதாரர்கள் செல்வதற்கு அவசியம் என்ன? தமிழ்நாட்டில் ஏராளமான முதல் நிலை காண்டிராக்டர்கள் உள்ளனர். அத்தனை காண்டிராக்டர்களும் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கேட்டால் என்ன ஆகும்? மனுதாரர்கள் கோரிக்கை ஏற்புடையதல்ல. அதிக ரொக்கப்பணத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதற்கு பதிலாக ஆன்லைன் மூலமாக பரிவர்த்தனை செய்வதுதான் பாதுகாப்பானது.

அச்சுறுத்தலை  ஏற்படுத்தலாம்

எனவே ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை பின்பற்றும்வகையில் மனுதாரர்கள் வங்கிக்கணக்கை தொடங்கி பராமரிக்கலாம். ஏற்கனவே மனுதாரர்கள் மற்றும் அவர்களது தந்தைக்கு இடையேயான பிரச்சினையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில வழக்குகளில் விடுதலையாகியுள்ளனர்.

இந்தநிலையில் அவர்களுக்கு துப்பாக்கி லைசென்சு வழங்கும்பட்சத்தில் அது, பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம். மனுதாரர்கள் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி துப்பாக்கி லைசென்சு பெற முயற்சிப்பதை ஏற்க இயலாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்