ஓசூர் அரசு பள்ளியில் மாணவர்களிடம் வசூல் செய்த பணம் திரும்ப ஒப்படைப்பு: கலெக்டர் சரயு நடவடிக்கை

Update: 2023-07-01 19:45 GMT

ஓசூர்

ஓசூர் அரசு பள்ளியில் மாணவர்களிடம் வசூல் செய்த பணத்தை திரும்ப ஒப்படைக்க கலெக்டா் சரயு நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து மாணவர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டது.

மாணவர்களிடம் வசூல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முல்லை நகர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அலெக்சாண்டர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக அரசு பள்ளி மேம்பாட்டு பணி மற்றும் வளர்ச்சிப்பணிகள் என்றும், தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் ரூ.5 லட்சம் கட்டாய நிதி வசூல் செய்தார். இந்த பணத்தை அவர் மோசடி செய்ததாக கடந்த 20-ந்தேதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், முந்தைய தலைமை ஆசிரியர் கட்டாய வசூல் செய்த பணத்தை மாணவர்களிடமே திருப்பி வழங்க மாவட்ட கலெக்டர் சரயு உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மகேஸ்வரி அறிவுறுத்தலின்படி, வங்கியில் இருந்து அந்த பணம் பெறப்பட்டு மாணவர்களுக்கு திருப்பி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

திரும்ப ஒப்படைப்பு

ஓசூர் தாசில்தார் சுப்பிரமணி, மாவட்ட கல்வி அலுவலர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலையில் நேற்று 26 மாணவர்களுக்கு ரூ.32 ஆயிரத்து 300 திரும்ப ஒப்படைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் பிரபாகர், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் சக்திவேல், சமத்துவபுரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கோபாலப்பா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பள்ளியின் மேலாண்மைக்குழு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்