ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.4 லட்சம் 'அபேஸ்'
காவேரிப்பட்டணத்தில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ. 4 லட்சத்தை அபேஸ் செய்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்
காவேரிப்பட்டணத்தில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ. 4 லட்சத்தை அபேஸ் செய்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பணம் திருட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சந்தாபுரத்தை சேர்ந்தவர் சாந்தி (வயது 57). விறகு கடை வைத்துள்ளார். இவர் வியாபாரத்திற்காக நேற்று முன்தினம் கொசமேடு பகுதியில் இயங்கும் ஒரு வங்கியில் நகைகளை அடகு வைத்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வாங்கினார். மேலும் அவர் தனது சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் எடுத்தார். இதையடுத்து சாந்தி ரூ.4 லட்சத்துடன் வங்கியில் இருந்து வெளியே வந்து ஸ்கூட்டர் இருக்கையின் கீழ் வைத்து பூட்டினார். பின்னர் அவர் அந்த பகுதியிலுள்ள கடையில் டீ குடிப்பதற்காக சென்றார். சிறிது நேரம் கழித்து சாந்தி திரும்பி வந்தபோது ஸ்கூட்டர் சீட் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.4 லட்சம் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
4 பேருக்கு வலைவீச்சு
இதுகுறித்து அவர் காவேரிப்பட்டணம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து ேபாலீசார் விரைந்து வந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 25 முதல் 35 வயது மதிக்கத்தக்க 4 வாலிபர்கள் ஸ்கூட்டரின் சீட்டை உடைத்து பணத்தை திருடி சென்றது பதிவாகி இருந்தது. வங்கியில் இருந்து சாந்தி பணத்தை கொண்டு வந்து ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் வைத்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பணத்தை அபேஸ் செய்தது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.