வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள கிராம ஊராட்சிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்-இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம்
தர்மபுரி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இண்டூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார துணை செயலாளர் மாதையன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர்கள் சின்னசாமி, மாதேஸ்வரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். நல்லம்பள்ளி ஒன்றியத்தை பிரித்து இண்டூரை தலைமையிடமாக கொண்டு தனி ஒன்றியம் ஏற்படுத்த வேண்டும்.
நாகலாபுரத்தில் செயல்பட்டு வரும் வேளாண்மை விரிவாக்க மையத்தை இண்டூரில் அமைக்க வேண்டும். ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் முறையாக பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். சுடுகாடு இல்லாத அனைத்து கிராமங்களுக்கும் சுடுகாடு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு ஊக்குவிப்பு நிதியை குறித்த நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.