கோவில் திருவிழாவையொட்டி 10 நாட்களுக்கு மொய் விருந்துகள் நிறுத்தம்

முத்துமாரியம்மன் கோவில் திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குவதால் கீரமங்கலத்தில் 10 நாட்களுக்கு மொய் விருந்துகள் நிறுத்தப்பட்டன.

Update: 2023-07-22 18:43 GMT

மொய் விருந்து

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம், மேற்பனைக்காடு, குளமங்கலம், வடகாடு, மாங்காடு, அணவயல், புள்ளாண்விடு, நெடுவாசல் உள்பட சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வழக்கமாக ஆடி மாதத்தில் நடத்தப்படும் மொய் விருந்துகள் இந்த ஆண்டு ஒரு மாதம் முன்னதாக ஆனி மாதத்திலேயே தொடங்கி நடந்து வருகிறது. கஜா புயல், கொரோனா பாதிப்புகளால் எதிர்பார்த்த அளவு மொய் வசூல் இல்லாமல் குறைந்து வருகிறது. ஆனால் வழக்கத்தைவிட கூடுதலாக செலவு அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் கீரமங்கலத்தில் தொடங்கிய மொய் விருந்துகள் கொத்தமங்கலம், மேற்பனைக்காடு என பல கிராமங்களிலும் நடந்து வரும் நிலையில் நேற்று கீரமங்கலத்தில் 3 திருமண மண்டபங்களில் கீரமங்கலம், செரியலூர், பனங்குளம், குளமங்கலம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 40 பேர் சேர்ந்து ஆட்டுக்கறி விருந்து கொடுத்து மொய் விருந்து நடத்தினார்கள்.

இதில் சுமார் ரூ.1½ கோடி மொய் வசூலானது. இது குறைந்த அளவு மொய் வசூல் என்கின்றனர் மொய் விருந்தாளர்கள்.

கோவில் திருவிழா

இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கி 10 நாட்கள் வரை நடப்பதால் கீரமங்கலத்தில் 10 நாட்களும் மொய் விருந்துகள் நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது திருவிழா நாட்களில் பால் குடம், காவடி, கலை நிகழ்ச்சிகள் நடப்பதுடன் தினசரி மதியம் அன்னதானம் வழங்கப்படுவதால் அசைவ உணவு சமைத்து மொய் விருந்துகள் நடத்த முடியாது என்பதால் மொய் விருந்துகள் நிறுத்தப்படுவதாக கூறுகின்றனர்.

ஆனால் மற்ற ஊர்களில் வழக்கம் போல் மொய் விருந்துகள் நடத்தப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்