நாகை மீன்பிடி துறைமுகத்தை ரூ.81 கோடியில் நவீனப்படுத்தும் பணி

நாகை மீன்பிடி துறைமுகத்தை ரூ.81 கோடி மதிப்பில் நவீனப்படுத்தும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது.

Update: 2023-09-16 19:15 GMT

நாகை மீன்பிடி துறைமுகத்தை ரூ.81 கோடி மதிப்பில் நவீனப்படுத்தும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது.

நாகை மீன்பிடி துறைமுகம்

நாகை மாவட்டத்தில் மீன்பிடி தொழிலும், விவசாயமும் பிரதான தொழில்களாக விளங்குகின்றன. நாகை மாவட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் வெளிமாநிலங்களுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் அந்நிய செலாவணி அதிக அளவில் ஈட்டப்படுகிறது.

இந்த நிலையில் நாகை அக்கரைப்பேட்டையில் உள்ள மீன்பிடி துறைமுகத்தை நவீனப்படுத்த வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

ரூ.81 கோடி ஒதுக்கீடு

இதையடுத்து மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நாகை மீன்பிடி துறைமுகத்தை நவீனப்படுத்த ரூ.81 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து துறைமுகத்தை நவீனப்படுத்தும் பணி பூமி பூஜையுடன் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதற்கான நிகழ்ச்சியில் நாகை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் ஆகியோர் பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

அப்போது கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கூறியதாவது:-

சுனாமி பேரலை

நாகை அக்கரைப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து 14 ஆயிரத்து 350 மீனவர்கள் நேரடியாக மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 576 விசைப்படகுகள், 446 பைபர் படகுகள் ஆகியவற்றை கொண்டு மீனவர்கள் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர். 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமி பேரலை காரணமாக நாகை மீன்பிடி துறைமுகம் பெரும் அழிவை சந்தித்தது. அப்போது தமிழ்நாடு அரசு மீன்பிடி துறைமுகத்தை புனரமைக்க ரூ.45 கோடியே 21 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடந்தன.

தற்போது மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இங்கு மீன்களை இறக்குவதற்கும், சுகாதாரமான முறையில் மீன்களை கையாள்வதற்கும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

நவீனப்படுத்தும் பணி

எனவே நாகை அக்கரைப்பேட்டையில் உள்ள மீன்பிடி துறைமுகத்தை நவீனப்படுத்த ரூ.81 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு துறைமுகத்தில் 290 மீட்டர் நீளத்துக்கு படகு அணையும் தளம், படகு பழுதுநீக்கும் சாய்தளம், மீன் ஏற்றும் கூடத்துடன் கூடிய மீன் ஏலக்கூடம், வலைபின்னும் கூடம், கழிவறை வசதிகள், வாகனம் நிறுத்தும் இடம், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும்.

படகுகள் பாதுகாப்பு

இந்த பணிகள் நிறைவு பெற்றவுடன் மீன்பிடி உபகரணங்கள் மற்றும் படகுகளை பாதுகாப்புடன் கரைக்கு கொண்டு செல்ல முடியும். சுகாதாரமான முறையில் மீன்களை இறக்குவதுடன் சந்தைப்படுத்தவும் முடியும். படகுகளை நவீனமுறையில் பழுது நீக்கம் செய்ய முடியும்

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் நாகை மாலி எம்.எல்.ஏ., நகர சபை தலைவர் மாரிமுத்து, மீன்வளத்துறை துணை இயக்குனர் ஜெயராஜ், அக்கரைப்பேட்டை ஊராட்சி தலைவர் அழியாநிதி உள்பட பலர் உடன் இருந்தனர்.

பெண்களுக்கு ஏ.டி.எம்.கார்டு

நாகையில் உரிமைத்தொகை பெறும் பெண்களுக்கு வங்கி கணக்கு அட்டை மற்றும் ஏ.டி.எம். கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தாட்கோ கழக தலைவர் மதிவாணன், எம்.எல்.ஏ.க்கள் முகமது ஷாநவாஸ், நாகை மாலி ஆகியோர் உரிமைத் தொகை பெறும் பெண்களுக்கு வங்கி கணக்கு அட்டை மற்றும் ஏ.டி.எம். கார்டினை வழங்கினர். நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் ரஞ்சித்சிங், உதவி கலெக்டர் பானோத் ம்ருகேந்தர் லால், நகர சபை தலைவர் மாரிமுத்து, ஒன்றியக்குழு தலைவர் அனுசுயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்