மேலப்பட்டி அரசுப்பள்ளியில் மாதிரி சட்டசபை தேர்தல்

மோகனூர் மேலப்பட்டி அரசுப்பள்ளியில் மாதிரி சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

Update: 2022-09-10 19:46 GMT

மோகனூர்

மோகனூர் ஒன்றியம், என்.புதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மாணவர் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் அண்ணாதுரை தலைமையில் தேர்தல் நடைபெற்றது. 11 பதவிக்கு 7 இடங்களுக்கு 2, 3 மற்றும் 4-ம் வகுப்பு மாணவ பிரதிநிதிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 4 இடங்களுக்கு 6 பேர் போட்டியிட்டனர்.

கடந்த ஒரு வார தீவிர பிரசாரத்திற்கு பிறகு பள்ளி வளாகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் உள்ள 108 வாக்குகளில், 84 வாக்குகள் பதிவாகின. இதில் 5-ம் வகுப்பு மாணவன் ப.சந்தோஷ் 25 வாக்குகள் பெற்று, முதல் இடத்தை பிடித்து மாணவர் சட்டமன்றத்தின் முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 20 வாக்குகள் பெற்ற மாணவி நக்சத்திரா சட்டமன்ற சபாநாயகராகவும், 16 வாக்குகள் பெற்ற மாணவி சுசிதா சுற்றுச்சூழல் அமைச்சராகவும், 14 வாக்குகள் பெற்ற தர்ஷன் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். 4-ம் வகுப்பு மாணவன் பவன் நிஷோக் கல்வித்துறை அமைச்சராகவும், ரோகித் நீர்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். 3-ம் வகுப்பு மாணவன் அனீஷ் ஸ்ரீசாந்த் சுகாதாரத்துறை அமைச்சராகவும், நதிகா சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். 2-ம் வகுப்பு மாணவன் ரிசாந்த் உணவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஆசிரியர்கள் இளங்கோ மற்றும் ராகவன் கண்காணிப்பு அலுவலராகவும், தேன்மொழி, கிருஷ்ணவேணி ஆகியோர் தேர்தல் பணியாளர்களாகப் பணியாற்றினர். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டவுடன் வெற்றி பெற்றவர்களுக்கு சக போட்டியாளர்களும், மாணவர்களும், ஆசிரியர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்