எம்.எல்.ஏ. காலில் விழுந்து முறையிட்ட பெண் வியாபாரிகள்; பழனியில் பரபரப்பு

பழனியில் சாலையோர கடைகளை அகற்றக்கூடாது என்று எம்.எல்.ஏ. காலில் பெண் வியாபாரிகள் விழுந்து முறையிட்டனர்.

Update: 2023-08-13 21:00 GMT

பழனி அடிவாரம் கிரிவீதிகளில் அலங்கார பொருட்கள், பூஜை பொருட்கள், ஓட்டல்கள் என பல்வேறு கடைகள் உள்ளன. மேலும் கிரிவீதி ஓரம் தள்ளுவண்டிகளில் வைத்தும் சிலர் வியாபாரம் செய்கின்றனர். பழனிக்கு வரும் பக்தர்கள் இங்கு வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பழனி கிரிவீதிகளில் சாலையோர கடைகள் போலீசாரால் அகற்றப்பட்டு வருகிறது. இதற்கு சாலையோர வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே பழனி முருகன் கோவில் அலுவலகத்தில் சிலை பாதுகாப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கலந்துகொள்வதற்காக பழனி தொகுதி எம்.எல்.ஏ. இ.பெ.செந்தில்குமார் வந்திருந்தார். பின்னர் அவர் கூட்டம் முடிந்து வெளியே வந்தார். அப்போது கோவில் அலுவலகத்தில் சாலையோர வியாபாரிகள் சிலர் காத்திருந்தனர். அவர்கள் எம்.எல்.ஏ.வை பார்த்ததுடன், அவரை சூழ்ந்து நின்று, சாலையோர கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து முறையிட்டனர். மேலும் சாலையோர கடைகள் அகற்றப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், எனவே சாலையோர கடைகளை அகற்ற கூடாது என கோரிக்கை வைத்தனர். அப்போது 2 பெண்கள், திடீரென்று எம்.எல்.ஏ.வின் காலில் விழுந்து முறையிட்டனர்.

இதனால் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., இதுகுறித்து போலீஸ் துணை சூப்பிரண்டுவிடம் பேசி உள்ளேன். பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் கடை வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதைத்தொடர்ந்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பழனி கோவில் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்