லோயர்கேம்ப் குடிநீரேற்று நிலையத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு

கூடலூர் அருகே லோயர்கேம்ப் குடிநீரேற்று நிலையத்தில் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

Update: 2023-03-15 19:00 GMT

கம்பம் பள்ளத்தாக்கு பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்பில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டது. இங்கிருந்து சுத்திகரிக்கப்பட்டு லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கூடலூர், கம்பம், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி மற்றும் கோம்பை, தேவாரம், பண்ணைப்புரம் உள்ளடக்கிய 3 பேரூராட்சிகள், 4 கிராம ஊராட்சிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோடைகாலம் தொடங்கியுள்ளதை தொடர்ந்து, மின்தடையினால் கிராமப்பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தடையில்லாமல் குடிநீர் வழங்க வேண்டும் என்று கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணனிடம் பொதுமக்கள் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து நேற்று லோயர்கேம்பில் உள்ள கூட்டுக் குடிநீர் வடிகால்வாரிய நீரேற்று நிலையத்துக்கு கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் மின்வாரிய அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் எம்.எல்.ஏ. கூறுகையில், கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு தடையில்லாமல் குடிநீர் வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுபோல் மோட்டார்கள் பழுது ஏற்பட்டால் உடனடியாக சீரமைப்பு பணிகள் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனிமேல் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை வராது என்றார்.

ஆய்வின்போது, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள், ஊராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்