மதுரையில் மு.க.அழகிரி-உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

மு.க.அழகிரி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேற்று மதுரையில் சந்தித்தனர்.

Update: 2023-01-16 21:06 GMT


மு.க.அழகிரி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேற்று மதுரையில் சந்தித்தனர்.

சந்திப்பு

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த போட்டியினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதற்காக அவர் நேற்று விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து டி.வி.எஸ்.நகரில் உள்ள முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் வீட்டிற்கு வந்தார். அவரை மு.க.அழகிரி மற்றும் காந்தி அழகிரி ஆகியோர் வாசலில் வந்து வரவேற்றனர். அப்போது உதயநிதி ஸ்டாலின், மு.க.அழகிரியின் காலின் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். அதன்பின் உதயநிதி ஸ்டாலின், மு.க.அழகிரி வீட்டிற்குள் சென்றார். இருவரும் சுமார் 20 நிமிடங்களுக்கு பேசினர்.

அதன்பின் வீட்டில் இருந்து வெளியே உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, நான் அமைச்சர் ஆன பின் எனது பெரியப்பாவை(மு.க.அழகிரி) சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக வந்தேன். அவர் மனநிறைவோடு வாழ்த்தினார். எனக்கு மிக்க மகிழ்ச்சி என்றார்.

மகிழ்ச்சி

அப்போது மு.க.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது தம்பி மகன் என்னிடமும், பெரியம்மாவிடமும்(காந்தி அழகிரி) ஆசீர்வாதம் வாங்க வந்திருந்தார். உதயநிதி ஸ்டாலினும் எனது பிள்ளை தான். அவர் அமைச்சர் ஆனவுடன் நான் வாழ்த்தினேன். அவர் தற்போது நேரில் வாழ்த்து பெற்று இருக்கிறார். அவர் எனது இல்லத்திற்கு வந்ததற்கு அளவில்லா மகிழ்ச்சி அடைந்து இருக்கிறேன். அவர் சிறுவனாக இருக்கும் போது நெல்லையில் உள்ள எங்களது வீட்டிற்கு அடிக்கடி வந்திருக்கிறார். எனது தம்பி மு.க.ஸ்டாலின், முதல்-அமைச்சராகி இருக்கிறார். மகன் உதயநிதி, அமைச்சராகி இருக்கிறார். அதனை விட பெரிய மகிழ்ச்சி இருக்கிறதா?.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நிருபர்கள் மு.க.அழகிரியிடம் உங்களை மீண்டும் தி.மு.க.வில் எதிர்பார்க்கலாமா என்று கேட்டனர். அதற்கு மு.க.அழகிரி, அதனை நீங்கள் அவர்களிடம் தான் போய் கேட்க வேண்டும் என்றார். அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் துணை மேயர் மன்னன், எம்.எல்.ராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

வரவேற்பு

முன்னதாக அமைச்சர் உதயநிதியை, அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், கோ.தளபதி எம்.எல்.ஏ. உள்பட பலர் சால்வை அணிவித்து வரவேற்றனர். இதற்கிடையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சரான பின் முதன் முறையாக மதுரைக்கு வந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். எனவே அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி, கோ.தளபதி எம்.எல்.ஏ., மணிமாறன் ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகள் செய்து உள்ளனர். அவர் மதுரையில் இருந்து இன்று அலங்காநல்லூர் செல்லும் வழிநெடுகிலும் வரவேற்பு அளிக்கப்படுகிறது. குறிப்பாக கடச்சனேந்தல், ஊமச்சிகுளம், அலங்காநல்லூர்-கேட்டுக்கடை ஆகிய இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தி.மு.க.வின் அனைத்து அணிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று தி.மு.க. மாநகர், மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்