குறுங்காடு அமைக்கும் பணி தொடக்கம்

நாகை அருகே குறுங்காடு அமைக்கும் பணியை கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

Update: 2023-02-19 19:15 GMT

நாகை அருகே குறுங்காடு அமைக்கும் பணியை கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

'மியாவாக்கி' காடுகள்

உலகம் முழுவதும் காடுகள் அழிக்கப்பட்டு வரும் நிலையில், வெப்பமயமாதல் அதிகரித்துவிட்டது. இதே நிலைமை நீடித்தால் எதிர்காலத்தில் பருவ நிலை மாறுபாடுகள் அதிகரிக்கும் ஆபத்து உள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் கூறுகிறார்கள். வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் பணியில் 'மியாவாக்கி' எனப்படும் குறுங்காடுகள் பேருதவியாக இருக்கிறது.

தற்போது தமிழகத்தில் பல இடங்களில் இத்தகைய குறுங்காடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி நாகை அருகே சிக்கலில் 1 ஏக்கர் நிலத்தில் 50 வகையான ஆயிரம் மரக்கன்றுகளுடன் குறுங்காடு அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. கலெக்டர் அருண் தம்புராஜ் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு குறுங்காடு அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், 'குறைந்த பரப்புள்ள இடங்களில் ஏராளமான மரங்களை உருவாக்குவதுதான் 'மியாவாக்கி' எனப்படும் குறுங்காடுகள் ஆகும்.

இந்த காடுகளில் விதவிதமான மரக்கன்றுகளை நடுவது, வளர்ப்பது மிகவும் எளிது. மரக்கன்றுகள் வேகமாக வளர்ந்து 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு பிறகு குட்டி காடுகள் ஆகிவிடும். அதன்பின்னர் எந்த பராமரிப்பும் தேவைப்படாது.

மழைப்பொழிவு அதிகரிக்கும்

ஆயிரம் மரங்களை வளர்த்தால் ஆண்டுக்கு 5 டன் 'கார்பன்-டை- ஆக்சைடை' இந்த மரங்கள் உட்கொண்டு, 2 டன் ஆக்சிஜனை வழங்கும் என்று இயற்கை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது மட்டுமல்லாமல், இந்த மரங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் கிடைப்பதுடன் பூமியின் வெப்பமும் வெகுவாக குறைக்கப்பட்டு, காற்றின் ஈரப்பதம் தக்க வைக்கப்படுவதால் மழைப்பொழிவும் அதிகரிக்கும். ஏராளமான நுண்ணுயிர்கள், பறவைகள், புழு, பூச்சி பெருக்கம் அதிகமாக இருக்கும்.

மாணவர்கள் சிறு வயதிலிருந்து மரக்கன்றுகளை நடுவதற்கு ஆர்வம் காட்ட வேண்டும்' என்றார். நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், நாகை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மீனாட்சி, இயற்கை ஆர்வலர்கள் ரேவதி, சோலைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்