குடிநீரில் கழிவுநீர் கலப்பு:தி.மு.க. பெண் கவுன்சிலர் சாலை மறியல்
குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதால், தி.மு.க. பெண் கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதால், தி.மு.க. பெண் கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
சமரசம்
மதுரை மாநகராட்சி 79-வது வார்டுக்கு உட்பட்ட ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகர், சுந்தரராஜபுரம், ராமையா தெரு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக புகார்கள் வந்தன. இது குறித்து அந்த பகுதி மக்கள், மாநகராட்சிக்கு பல முறை புகார் அளித்துள்ளனர். ஆனால் பிரச்சினை தீரவில்லை. எனவே அந்த பகுதி மக்கள், தி.மு.க. பெண் கவுன்சிலர் லத்திகா ஸ்ரீ வீட்டுக்கு சென்று முறையிட்டனர். அவர், அந்த பகுதி மக்களை அழைத்து ஜீவாநகர் சந்திப்பு பகுதிக்கு வந்தார். பின்னர் அங்கு சாலையில் அமர்ந்து திடீரென்று கவுன்சிலர் மறியலில் ஈடுபட்டார். அதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனே போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் மாநகராட்சி உதவி கமிஷனர் சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் வந்து சமரசம் செய்தனர். அப்போது இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
குழாய் சேதம்
இதுகுறித்து நகர் பொறியாளர் அரசு கூறியதாவது:- மதுரை மாநகராட்சி வார்டுகள் 79, 80, 81, 82, 83 ஆகிய பகுதிகளின் கழிவுநீர் சுந்தரராஜபுரம், கோவலன் பொட்டல், பழங்காநத்தம், டி.வி.எஸ்.நகர் ஆகிய பகுதிகளில் உள்ள கழிவு நீர் நீரேற்று நிலையத்திற்கு செல்கிறது. அதில் பழங்காநத்தத்தில் இருந்து ஜெய்ஹிந்த்புரம் செல்வதற்கான பாலத்தில் இணைப்பு மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருவதால் பாதாள சாக்கடை குழாய் சேதம் அடைந்துள்ளது. அதனால் கழிவு நீர் நீரேற்று நிலையத்திற்கு செல்வதில்லை. அதனால் அந்த நீர், சாலையில் உள்ள பாதாள சாக்கடை வெளியேறுகிறது. அதனை தற்காலிகமாக தடுக்க, தினமும் 11 லாரிகள் மூலம் கழிவு நீர் உறிஞ்சப்படுகிறது. மேலும் சேதம் அடைந்த குழாய்களை சீரமைக்கும் பணியும் தொடங்கி உள்ளது. மிக விரைவில் இந்த பிரச்சினையை தீர்க்க மாநகராட்சி முழு அளவில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.