சிறுபான்மையின மக்களுக்கான திட்டங்கள்

சிறுபான்மையின மக்களுக்கான திட்டங்கள்

Update: 2022-07-29 12:38 GMT

திருப்பூர்,

சிறுபான்மையின மக்களுக்கு திட்டங்களை விரைந்து கொண்டு சேர்க்க வேண்டும் என்று சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் சுரேஷ்குமார் அறிவுறுத்தினார்.

இயக்குனர் ஆய்வு

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் டாக்டர் சுரேஷ்குமார் தலைமையில் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது:-

சமுதாயத்தில் அடித்தளத்தில் உள்ள சிறுபான்மையின சமூகத்தினர் சமூக கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடைவதற்கு இனக்கமான சூழலை ஏற்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் 2 பேருக்கு தலா ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் கடனுதவிகள் வழங்கப்பட்டது.

திட்டங்கள்

முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், உலமா மற்றும் இதர பணியாளர்கள் நலவாரியம், மின்மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் எந்திரம், தேசிய கல்வி உதவித்தொகை, மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம், கிறிஸ்தவ தேவாலயம் புரனரமைக்கும் திட்டம், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் கடன் உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டங்களில் விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் கடனுதவி பெற்றவர்களின் வேஸ்ட் பனியன் வியாபார குடோன், ஜம்ஜம் நகரில் வேஸ்ட் பனியன் வியாபாரம் செய்யும் குடோன், முதலிபாளையத்தில் பூ அலங்கார தொழில் விற்பனை கூடம் ஆகியவற்றை சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் சுரேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி வாசுகி, கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் சீனிவாசன், மகளிர் திட்ட இயக்குனர் மதுமிதா, மாவட்ட சமூக நல அதிகாரி அம்பிகா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்