சிறுபான்மையின மக்கள் கடன் உதவிபெற விண்ணப்பிக்கலாம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மக்கள் கடன் உதவிபெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-29 17:18 GMT

வேலூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மக்கள் கடன் உதவிபெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடன் திட்டங்கள்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் தனிநபர்கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாக இருந்தால் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புறமாக இருந்தால் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். சுயஉதவிகுழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தனிநபர் கடன் ஆண்டுக்கு 6 சதவீத வட்டியில் அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சம் வரையும், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டத்தின் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதமும், பெண்களுக்கு 6 சதவீத வட்டியில் அதிகபட்ச கடனாக ரூ.30 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

கைவினை கலைஞர்கள்

கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டியில் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் வரை வழங்கப்படுகிறது. சுயஉதவிக்குழு கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் ஆண்டுக்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.

மேலும், சிறுபான்மை மாணவ-மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கும் கடனுதவி வழங்கப்படுகிறது.

எனவே மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து மதத்துக்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிட சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கடன் பெற விரும்புவோர் கலெக்டர் அலுவலகத்தில் முதல் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், வேலூர் கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் அலுவலகம், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்