குமரியில் சிறுபான்மையினர் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அரவிந்த் தகவல்

குமரியில் சிறுபான்மையினர் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அரவிந்த் அறிவித்து உள்ளார்.

Update: 2022-07-09 21:53 GMT

நாகர்கோவில்:

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறத்தில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புறத்தில் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். சுய உதவிகுழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.80 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சமும், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டத்தின் கீழ் ஆண்களுக்கு 8 சதவீத வட்டியிலும், பெண்களுக்கு 6 சதவீத வட்டியிலும் அதிகபட்ச கடனாக ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீத வட்டியிலும், பெண்களுக்கு 4 சதவீத வட்டியிலும் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது. மேலும் சிறுபான்மை மாணவ-மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு அதிகப்பட்சமாக தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் வரையில் 3 சதவீத வட்டியிலும், சுய உதவிகுழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீத வட்டியிலும், மாணவிகளுக்கு 5 சதவீத வட்டியிலும் ரூ.30 லட்சம் வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை, அல்லது இருப்பிடச்சான்று, கடன் பெறும்தொழில் குறித்த விவரம் மற்றும் திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுச்சான்றிதழ், உண்மைச்சான்றிதழ், கல்விக்கட்டணங்கள் செலுத்திய ரசீது மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்