முத்துக்குமரன் உடலுக்கு திருச்சியில் அமைச்சர்கள் அஞ்சலி
முத்துக்குமரன் உடலுக்கு திருச்சியில் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
திருவாரூர் மாவட்டம், ெலட்சுமாங்குடியை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது 40). இவரது மனைவி வித்தியா. பி.காம். பட்டதாரியான முத்துக்குமரன் உள்ளூரில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இதில் போதிய வருமானம் கிடைக்காததால் வேலைக்காக குவைத் சென்றார். ஆனால் அங்கு ஓட்டகம் மேய்க்க கூறி உள்ளனர். இது பற்றி முத்துக்குமரன் அவரது முதலாளியிடம் கேட்ட போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் முத்துக்குமரன் கடந்த 7-ந்தேதி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து அவரது உடலை மீட்டு தரக்கோரியும், உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அவரது உடல் குவைத்தில் இருந்து விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நேற்று மதியம் சுமார் 2.30 மணியளவில் திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ்பொய்யாமொழி, செஞ்சி மஸ்தான் மற்றும் பலர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் முத்துக்குமரன் உடல் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை அடுத்த ெலட்சுமாங்குடிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.