அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் குழந்தைகளுக்கு உணவு பரிமாறினர்
திருச்சி மாவட்டத்தில் 906 அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அமைச்சர்கள்கே.என்.நேரு, அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பள்ளி குழந்தைகளுக்கு உணவு பரிமாறினார்கள்.
திருச்சி மாவட்டத்தில் 906 அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அமைச்சர்கள்கே.என்.நேரு, அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பள்ளி குழந்தைகளுக்கு உணவு பரிமாறினார்கள்.
காலை உணவு திட்டம்
தமிழக முதல்-அமைச்ச ரின் காலை உணவு திட்டம் திருச்சி மாவட்டத்தில் முதற்கட்டமாக துறையூர் வட்டாரத்தில் 41 அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலக்கூடிய 2,793 மாணவ-மாணவிகளுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்கள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்பட்டு வரும் 906 அரசு பள்ளிகளில் பயிலக்கூடிய 54,647 மாணவ-மாணவிகளுக்கு நேற்று முதல் காலை உணவுத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் கே.என்.நேரு
அதன்படி நேற்று மணிகண்டம் ஒன்றியம், நாகமங்கலம் எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவை வழங்கினார். அதனை தொடர்ந்து விழா மேடை அருகே அமைக்கப்பட்டிருந்த அகன்ற திரையில் காலை உணவு திட்ட நிகழ்ச்சியில் முதல்-அமைச்சரின் உரையை விழாவில் கலந்து கொண்ட அனைவரும் ஆர்வமுடன் கேட்டனர். முடிவில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் ரமேஷ்குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டி, மணிகண்டம் ஒன்றியக்குழு தலைவர் கமலம்கருப்பையா, மணிகண்டம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் மாத்தூர் கருப்பையா, ஊராட்சி மன்ற தலைவர்கள் வெள்ளைச்சாமி (நாகமங்கலம்), தமிழ்ச்செல்வி காந்தி (அம்மாபேட்டை), எமல்டா லில்லிகிரேசி ஆரோக்கியசாமி (அளுந்தூர்), வசந்தா தங்கரத்தினம் (சேதுராபட்டி), ஜார்ஜ் பெர்னாண்டஸ் (நவலூர் குட்டப்பட்டு), தனலட்சுமி கொடியரசு (அதவத்தூர்) மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், அரசு துறை அலுவலர்கள், மகளிர் சுய உதவி குழு பெண்கள், மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
இதேபோல் நவல்பட்டு அருகே போலீஸ் காலனியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், திருவெறும்பூர் ஒன்றியக்குழு தலைவர் சத்யா கோவிந்தராஜ் நவல்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜேம்ஸ், ஒன்றிய கவுன்சிலர் கயல்விழி, திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அழகுமணி, தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதிய கல்வி கொள்கை
பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில், இந்த திட்டத்தில் தினமும் ஒவ்வொரு வகை உணவு வழங்கப்படும். பின்னர் மாவட்டத்தின் தேவை அடிப்படையில் மாற்றி அமைக்கப்படும். புதிய கல்வி கொள்கை என்பது இன்னமும் துரோணாச்சாரியாரை நினைவுபடுத்தும் விதமாக உள்ளது. இது பழைய காலமல்ல. மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் விதமாக முதல்-அமைச்சர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். கல்வி என்று வரும் பொழுது கல்வி மற்றும் கலாசாரத்தை கருத்தில் கொண்டு, என்ன தேவையோ அது குறித்து முதல்-அமைச்சர் திட்டங்களை செயல்படுத்துவார் என்றார்.