கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வினியோகம்; அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்

தமிழகம் முழுவதும் விரைவில் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும் நடைமுறை அமலுக்கு வரும் என்று திண்டுக்கல்லில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கூறினார்.

Update: 2022-11-18 16:37 GMT

தமிழகம் முழுவதும் விரைவில் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும் நடைமுறை அமலுக்கு வரும் என்று திண்டுக்கல்லில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கூறினார்.

திண்டுக்கல்லில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு பேசியதாவது:-

13½ லட்சம் புதிய ரேஷன்கார்டுகள்

தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சராக கருணாநிதி இருந்த போது ரூ.7 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல் விவசாய கடனுக்கு 9 சதவீத வட்டி செலுத்தி வந்த நிலையை மாற்றி, ஓராண்டுக்குள் திரும்ப செலுத்தினால் வட்டி கிடையாது என்றும் அறிவித்தார். கூட்டுறவு சங்கங்களுக்கு தி.மு.க. ஆட்சியில் தான் சொந்த கட்டிடம் கட்டித்தரப்பட்டது. தற்போது 6 ஆயிரத்து 500 பேருக்கு கூட்டுறவுத்துறையில் வேலை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவிலேயே 2-வது இடமாக கொடைக்கானலில் கூட்டுறவு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைய இருக்கிறது. மேலும் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி, ரூ.20 லட்சம் வரை சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் என மக்கள் பயன்பெறும் திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்துகிறார்.

மக்களின் வசதிக்காக 75 ரேஷன்கடைகள் பிரிக்கப்பட்டு உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் 1,084 ரேஷன்கடைகள் இருக்கின்றன. அதில் 871 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் உள்ளது. மீதமுள்ள கடைகளுக்கும் சொந்த கட்டிடம் கட்டப்படும். அதேபோல் தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சொந்த கட்டிடம் கட்டப்படும். விண்ணப்பித்த 15 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்து இருந்தார்.

கருவிழி பதிவு

அதன்படி மாநிலம் முழுவதும் 13 லட்சத்து 50 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 44 ஆயித்து 809 ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டன. மேலும் புதிதாக விண்ணப்பித்து உள்ளவர்களில் தகுதியான அனைவருக்கும் ரேஷன் கார்டு வழங்கப்படும். தற்போது ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்படுகிறது.

ஆனால் கூலி வேலைக்கு செல்வோர், முதியவர்களின் விரல் ரேகை சரியாக பதிவு ஆகாததால், பொருட்கள் வாங்குவதில் சிரமம் இருக்கிறது. இந்த சிரமத்தை தவிர்க்கும் வகையில் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கும் முறை தமிழகம் முழுவதும் விரைவில் அமலுக்கு வர இருக்கிறது.

இதன் முன்னோட்டமாக சென்னையில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. மேலும் ரேஷன்கடைக்கு வர இயலாதவர்கள் உரிய படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினால், பிற குடும்ப உறுப்பினர்கள் மூலம் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

இவ்வாறு அமைச்சர் அர.சக்கரபாணி பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்