மெரினா கடற்கரையில் 3-ம் பெருந்திட்டம் தொடர்பாக கையேடு வழங்கி, அமைச்சர் சேகர்பாபு விழிப்புணர்வு
சென்னை மெரினா கடற்கரையில் சென்னை பெருநகரின் 3-ம் பெருந்திட்டம் தொடர்பாக கையேடு வழங்கி அமைச்சர் சேகர்பாபு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சென்னை,
சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு, சென்னை பெருநகரின் 3-ம் பெருந்திட்ட தொலைநோக்கு ஆவண விழிப்புணர்வு கையேட்டினை சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகில் பொதுமக்களுக்கு வழங்கி, தங்கள் கருத்துகளை தெரிவிக்க வலியுறுத்தினார்.
கியூ.ஆர். கோடு வாயிலாகவும் மற்றும் இணையவழி வாயிலாகவும் கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து நிருபர்களிடம் சேகர்பாபு கூறியதாவது:-
3-ம் பெருந்திட்டம்
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சென்னை பெருநகர பகுதிக்கு 3-வது பெருந்திட்டத்துக்கான (2026-46) தொலைநோக்கு ஆவணம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. சென்னை பெருநகரின் முதல் பெருந்திட்டம் 1976-ம் ஆண்டும், 2-ம் பெருந்திட்டம் 2008-ம் ஆண்டும் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம், 1,189 சதுர கி.மீ. பரப்பிலான சென்னை பெருநகர பகுதிக்கு 3-ம் பெருந்திட்டத்தினை தயாரிக்க உள்ளது. இந்த திட்டம் 2026-ம் ஆண்டிலிருந்து செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது.
3-வது பெருந்திட்ட தொலைநோக்கு ஆவணம் தயாரிக்க கலந்தாலோசகர் நியமிக்கப்பட்டு, சென்னை பெருநகரில் 29 மண்டலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் கலந்தாலோசனை கூட்டங்கள் நடத்தி, அவர்களின் கருத்துகள் மற்றும் விருப்பங்கள் பெறப்பட்டது.
இதன்பொருட்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்கள், திரை அரங்கங்கள், வணிக வளாகங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், கல்வி, கல்லூரி நிறுவனங்கள் ஆகிய இடங்களில் நேரடியாகவும், வலைத்தள வாயிலாகவும் கருத்து கணிப்புகளை கேட்கும் முயற்சியை சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் முன்னெடுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்து தெரிவிக்கலாம்
இந்த நிகழ்ச்சியில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச்செயலாளர் அபூர்வா, சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, தலைமை திட்ட அமைப்பாளர் என்.ரவிக்குமார், முதுநிலை திட்ட அமைப்பாளர் காஞ்சனா மாலா, உதவி திட்ட அமைப்பாளர்கள் மற்றும் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த தொலைநோக்கு ஆவண தயாரிப்புக்கு கருத்து தெரிவிக்க விரும்புவோர், ஆங்கில படிவத்தினை பூர்த்தி செய்ய, https://forms.gle/1SaapSDXXyyAmbBK7 அல்லது தமிழ் படிவத்தினை பூர்த்தி செய்ய, https://forms.gle/4cQVYKFekpia4upr9 அல்லது www.cmavision.in என்ற இணையதள பக்கத்தில் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் தெரிவித்துள்ளது.