அமைச்சர் செந்தில்பாலாஜி கைது..! சட்ட வல்லுநர்களுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Update: 2023-06-14 00:05 GMT

சென்னை,

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் சோதனை நடைபெற்றது.

மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வந்தது. அவரது வீட்டில் 17 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த சோதனை அதிகாலை 2 மணியளவில் நிறைவடைந்தது.

இந்த நிலையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து சென்னை ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை அறிந்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர், அமைச்சர் செந்தில்பாலாஜியை காண மருத்துவமனைக்கு விரைந்தனர். இதனால் மருத்துவமனை பரபரப்புடன் கானப்பட்டது.

சோதனையின்போது, தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் இருந்து 3 பைகளில் ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர் எந்த வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுவரை உறுதியான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த சூழலில், சட்ட வல்லுநர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வீட்டில் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் கைதுசெய்யப்பட்டுள்ளதை சட்ட ரீதியில் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், இந்த பிரச்சினையை சட்டப்படி எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்