அமலாக்கத்துறை அதிகாரிகள் தன்னை தரையில் போட்டு தரதரவென இழுத்ததாக செந்தில் பாலாஜி தெரிவித்தார் - மனித உரிமை ஆணையம்
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் விதிமீறல் நடைபெற்றதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
சென்னை,
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதான நிலையில் முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே நீதிமன்ற காவலுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்ற காவலுக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது. செந்தில் பாலாஜியை ஜாமினில் விடுவிக்க கோருவது, காவேரி மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்த மனுக்கள் மீது உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை சென்னை ஐகோர்ட்டு இன்று விசாரிக்கிறது. நீதிபதிகள் நிஷா, பரதசக்கரவர்த்தி அமர்வில் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தியது. செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து சிகிச்சை விவரம் மற்றும் அமலாக்கத்துறை நடந்து கொண்ட விதம் குறித்து கேட்டறிந்தார்.
அதன்பின்னர் மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது மனித உரிமை மீறல். அமலாக்கத்துறை அதிகாரிகள் தன்னை தரையில் போட்டு தரதரவென இழுத்ததாக செந்தில் பாலாஜி தெரிவித்தார். தன்னை இழுத்ததால் தலையில் காயம் ஏற்பட்டதாக செந்தில் பாலாஜி தெரிவித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி சோர்வாக காணப்பட்டார். தன்னை தாக்கியதாக சில அதிகாரிகளின் பெயர்களையும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்
பெறப்பட்ட புகார்கள் அடிப்படையில் நேரில் விசாரித்தேன். அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மனித உரிமை ஆணையம் நாளை முடிவெடுக்கும். மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இதனை விசாரித்துள்ளது. தான் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்த பின்பும் துன்புறுத்தியதாக செந்தில் பாலாஜி கூறினார் என மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் அளித்த பேட்டியில் கூறினார்.