புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு

மேலப்புலம் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வுசெய்தார். அப்போது குடியிருப்பு பகுதியில் மழைநீர் வடிய நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2022-12-11 13:06 GMT

மேலப்புலம் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வுசெய்தார். அப்போது குடியிருப்பு பகுதியில் மழைநீர் வடிய நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அமைச்சர் காந்தி ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டம மேலப்புலம் சமத்துவபுரம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் வீடுகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் சுமார் 150 குடும்பங்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்றுமுன்தினம் ஆய்வு மேற்கொண்டு, மழைநீர் வடிய போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து அரசு அதிகாரிகள் அப்பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த கசக்கால்வாயை அளவீடு செய்து கால்வாயை தூர்வாரும் பணியை மேற்கொண்டனர். இந்தநிலையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று அப்பகுதியில் பார்வையிட்டு அரசு அதிகாரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் விவரங்களை கேட்டறிந்து, பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினார்.

நிரந்தர தீர்வு காண வேண்டும்

இதனையடுத்து அங்குள்ள முகாம்களில் தங்க வைத்திருக்கும் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது முகாமில் இருந்த பொது மக்கள் எங்கள் பகுதியில் இது போன்ற மழைக்காலங்களில் வெள்ளநீர் புகுந்து விடுகிறது. இதனால் நாங்கள் வசிக்கும் வீடுகள் சேதம் ஏற்படுகிறது. எனவே மழைநீர் வடிய நிரந்தர தீர்வு காணவேண்டும். எங்கள் வீடுகளை புதுப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு இனிவரும் காலங்களில் இதுபோன்று மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உங்களின் வீடுகலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இதனையடுத்து முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு போர்வை, பாய், உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

பயிர் சேதங்களை கேட்டறிந்தார்

முன்னதாக மேலப்புலம் பகுதியில் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு, அரசு அதிகாரிகளிடம் புயலால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். மேலும் ஓச்சேரி பகுதியில் இருந்து பனப்பாக்கம் செல்லும் சாலையில் தேங்கியுள்ள மழைநீர் வடிய ஏற்பாடு செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன், திட்ட இயக்குனர் லோகநாயகி, நெமிலி ஒன்றியக் குழு தலைவர் வடிவேல், மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள் பெருமாள், தோட்டக்கலை துணை இயக்குனர் லதாமகேஷ், தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் ரவீந்திரன், பெருமாள், ஊராட்சிமன்ற தலைவர் அனிதா நாராயணன், தோட்டக்கலை உதவி அலுவலர்கள் சுமித்ரா, திவ்யா உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்