சிறப்பு மருத்துவ முகாமிற்கு மக்கள் யாரும் வராததால் அமைச்சர் நாசர் அதிருப்தி..!
சிறப்பு மருத்துவ முகாமிற்கு மக்கள் யாரும் வராததால் அமைச்சர் நாசர் அதிருப்தி அடைந்தார்.
திருவள்ளூர்,
தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் தற்போது அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் சளி, இருமலுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதையடுத்து சுகாதாரத்துறை அறிவுரையின்படி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயலில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முகாமை அமைச்சர் நாசர் துவக்கி வைப்பதாக கூறப்பட்டிருந்தது. இதற்காக அமைச்சர் நாசர் அப்பகுதிக்கு வந்தார். அமைச்சர் வருகையின் போது, இருக்கையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர்.
மருத்துவ முகாமிற்கு மக்கள் யாரும் வராததால் அமைச்சர் நாசர் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து காரில் இருந்தபடியே அதிகாரிகள், திமுக கவுன்சிலர்கள், நிர்வாகிகளை அழைத்து மக்கள் எதற்காக மருத்துவ முகாமிற்கு வரவில்லை என கண்டித்தார். மேலும் மக்கள் யாரும் வராததால், சிறப்பு மருத்துவ முகாமை ரத்து செய்து அமைச்சர் நாசர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.