திருப்பத்தூர் பகுதியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்
திருப்பத்தூர் பகுதியில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் பகுதியில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.
விலையில்லா சைக்கிள்
திருப்பத்தூர் பகுதியில் உள்ள நாகப்பா மருதப்பா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோட்டையிருப்பு அரசு மேல்நிலைப்பள்ளி, திருக்கோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு வளர்ச்சி பெற்று பிற மாநிலங்களுக்கு முன் மாதிரியான மாநிலமாக திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது கல்வியை பொறுத்து அமைகிறது. இதை கருத்தில் கொண்டு அவர் உயர்கல்வியில் எண்ணற்ற திட்டங்களை மாணவர்களுக்கு அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதற்காக இந்த நிதியாண்டில் பள்ளி கல்விக்காக ரூ.40 ஆயிரம் கோடியும், உயர்கல்விக்காக ரூ.7 ஆயிரம் கோடியும் என மொத்தம் ரூ. 47ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த மாதம் சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு தொடர்ச்சியாக திருப்பத்தூர் ஒன்றியம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகள் அரசின் திட்டங்களை கருத்தில் கொண்டு நல்ல முறையில் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என பேசினார்.
உள்கட்டமைப்பு மேம்பாடு
தொடர்ந்து 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 2 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், விளையாட்டு போட்டி மற்றும் தனித்திறன்களில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும் என மொத்தம் 16 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் தனது சொந்த நிதியில் இருந்து தலா ரூ.5 ஆயிரம் பரிசு தொகை வழங்கினார். இதுதவிர மேற்கண்ட பள்ளிகளில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் தலா ரூ.10 ஆயிரம் வீதம் பள்ளிகளின் புரவலர் திட்ட நிதிக்காக வழங்கினார்.
இந்த விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி, யூனியன் தலைவர் சண்முகவடிவேல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ரவி மற்றும் கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.